ஹைதராபாத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 207 ரன்களை குவித்து, 208 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. 208 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் ராகுலின் அதிரடியான பேட்டிங்கால், 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

இந்திய அணி இந்த போட்டியில் அபாரமான வெற்றி பெற்றிருந்தாலும் கூட, இந்திய அணியின் ஃபீல்டிங் மோசமாகவே இருந்தது. அதை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார் யுவராஜ் சிங். ஆல்டைம் சிறந்த ஃபீல்டர்களில் ஒருவர் யுவராஜ் சிங். இன்றைக்கு, சிறந்த ஃபீல்டர்களாக திகழும் ஜடேஜா, ரெய்னா, ரோஹித் சர்மா, கோலி ஆகியோருக்கு அடித்தளத்தை அமைத்து கொடுத்ததே யுவராஜும் கைஃபும் தான் என்றால் மிகையாகாது. 

அப்படிப்பட்ட சிறந்த ஃபீல்டரான யுவராஜ் சிங், இந்திய அணியின் ஃபீல்டிங் இந்த போட்டியில் மிகவும் மோசமாக இருந்ததாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து டுவீட் செய்த யுவராஜ் சிங், இந்திய அணியின் ஃபீல்டிங் இன்றைக்கு(நேற்று செய்த டுவீட்) ரொம்ப மோசம். இளம் வீரர்கள் சற்று தாமதமாக பந்திற்கு ரியாக்ட் செய்தனர் என்று டுவீட் செய்துள்ளார். 

சாஹல் வீசிய 16வது ஓவரின் முதல் பந்து, ஹெட்மயரின் பேட்டில் எட்ஜ் ஆகி மேலெழுந்தது. பந்தின் தொலைவை சரியாக கணிக்காமல் அந்த கேட்ச்சை தவறவிட்டார் வாஷிங்டன் சுந்தர். அதற்கடுத்த ஓவரிலேயே தீபக் சாஹரின் பந்தில் ஹெட்மயர் தூக்கியடித்த பந்தை லாங் ஆனில் ஓடிச்சென்று பிடிக்க முயன்ற சுந்தர், அதையும் பிடிக்காமல் விட்டார். அதற்கடுத்த பந்தை பொல்லார்டு தூக்கியடிக்க, மிகவும் கஷ்டமான அந்த கேட்ச்சை ஓடிச்சென்று அபாரமாக டைவ் அடித்து, ஒற்றை கையில் பிடித்த ரோஹித் சர்மா, பேலன்ஸ் மிஸ்ஸாகி பவுண்டரிக்கு லைனிற்குள் செல்ல நேர்ந்ததால், சிக்ஸர் கிடைத்துவிடாமல் இருப்பதற்காக மைதானத்திற்குள் தூக்கியெறிந்தார். கஷ்டமான கேட்ச்சை அசால்ட்டாக பிடித்து, ஆனால் உள்ளே தூக்கிப்போட்ட ரோஹித், அதற்கடுத்த பந்தில் கைக்கு நேராக வந்த கேட்ச்சை விட்டார். 

இவ்வாறாக இந்திய அணியின் சிறந்த ஃபீல்டர்கள் கூட நேற்று கொஞ்சம் மோசமாகத்தான் ஃபீல்டிங் செய்தார்கள். அதைத்தான் யுவராஜ் சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.