2019ல் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணியாக இந்தியாவும் இங்கிலாந்தும் பார்க்கப்பட்டன. ஆனால் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. 

உலக கோப்பை அணி தேர்வே கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், அரையிறுதியில் இறக்கப்பட்ட பேட்டிங் ஆர்டர் தான் தோல்விக்கு காரணம் என விமர்சிக்கப்பட்டது. அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்துகொண்டிருந்த நிலையில், அனுபவ வீரர் தோனியை 4ம் வரிசையிலோ, 5ம் வரிசையிலோ இறக்காமல் 7ம் வரிசையில் இறக்கியதுதான் தோல்விக்கு முக்கியமான காரணம் என அணி நிர்வாகத்தின் இந்த முடிவு கடும் விமர்சனத்துக்குள்ளானதுடன் சர்ச்சையையும் கிளப்பியது. 

அரையிறுதியில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்கள் என்ற இலக்கை அடிக்க முடியாமல் 221 ரன்களுக்கே இந்திய அணி ஆல் அவுட்டாகி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. உலக கோப்பைக்கான அணி தேர்வும், அரையிறுதியில் ஆடும் லெவன் வீரர்கள் தேர்வும் கூட கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகின. 

இவ்வாறு உலக கோப்பை அணி விவகாரத்தில், தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் செய்த தேர்வுகளும், எடுத்த முடிவுகளும் கடும் சர்ச்சையை கிளப்பியதோடு விமர்சனங்களையும் எதிர்கொண்டன. 

இந்நிலையில், உலக கோப்பையில் இந்திய அணி தோற்றதற்கான காரணம் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் யுவராஜ் சிங், 2019 உலக கோப்பையில் இந்திய அணியின் திட்டமிடல் படுமோசம். அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும், உலக கோப்பைக்கு முன்பும் உலக கோப்பையின் போதும், சில தவறான முடிவுகளை எடுத்தன. அதுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம். இந்திய அணியால் கண்டிப்பாக கோப்பையை வென்றிருக்க முடியும். அந்தளவிற்கு இந்திய அணியில் திறமைசாலிகள் நிரம்பி வழிகின்றனர். ஆனால் சில தவறான முடிவுகளும் மோசமான திட்டமிடுதலும்தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்று யுவராஜ் சிங் தெரிவித்தார். 

உலக கோப்பை அணியில் ராயுடுவை எடுக்காதது, உலக கோப்பையின் இடையே தவானும் விஜய் சங்கரும் காயத்தால் விலகியபோது கூட, ராயுடுவை அணியில் சேர்க்காதது, அரையிறுதியில் ஷமியை ஆடவைக்காதது, அரையிறுதியில் தோனியை பின்வரிசையில் இறக்கியது ஆகிய விஷயங்கள் அனைத்தையும் தான் குறிப்பிட்டு சொல்லாமல் மறைமுகமாக சொல்லியிருக்கிறார் யுவராஜ் சிங்.