இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங், கடந்த 10ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாகவும், சிறந்த ஆல்ரவுண்டராகவும் திகழ்ந்த யுவராஜ் சிங், 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஆகியவற்றை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றியவர். 

கடந்த 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இந்திய அணியில் ஆடவில்லை. ஆனால் ஐபிஎல்லில் ஆடிவந்தார். ஐபிஎல்லிலும் அவருக்கு முன்பைப்போல் பெரிய டிமாண்ட் இல்லாததால் கடந்த 10ம் தேதி சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றில் இருந்து ஓய்வு பெற்றார். 

இதனால் யுவராஜ் சிங்கின் ஆட்டத்தை இனிமேல் பார்க்க முடியாது என அவரது ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். இந்நிலையில், கனடா டி20 லீக்கில் ஆடவுள்ளார் யுவராஜ். ஓய்வுபெற்ற பிறகு வெளிநாட்டு டி20 தொடர்களில் ஆட அனுமதி கோரி பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியிருந்தார் யுவராஜ் சிங். அவருக்கு பிசிசிஐ அனுமதி அளித்தது. 

இந்நிலையில், கனடா டி20 லீக்கில் டொரண்டோ நேஷனல்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் யுவராஜ் சிங். இந்த அணியில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி பேட்ஸ்மேனுமான பிரண்டன் மெக்கலமும் உள்ளார். டொரண்டோ நேஷனல்ஸ் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே யுவராஜ் சிங்கின் ஆட்டத்தை கனடா டி20 லீக்கில் பார்க்கலாம் என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.