இந்திய அணியில் 2000ம் ஆண்டில் அறிமுகமாகி, இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் வீரராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஆகிய இரண்டையும் இந்திய அணி வென்றபோது அந்த தொடர்களில் யுவராஜ் சிங்கின் பங்களிப்பு அளப்பரியது. அந்த 2 உலக கோப்பை தொடர்களிலுமே யுவராஜ் சிங் தான் தொடர் நாயகன் விருதை வென்றார். 

கடந்த 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் இந்திய அணியில் யுவராஜ் இடம்பெறவில்லை. திடீரென அணியிலிருந்து யுவராஜ் சிங் ஓரங்கட்டபட்டார். ஆனால் அவர் ஓரங்கட்டப்பட்ட பிறகு, தற்போது வரை இந்திய அணியில் மிடில் ஆர்டர் சிக்கல் இருந்துவருகிறது. மிடில் ஆர்டரில் வலுசேர்த்த யுவராஜ் சிங்கை, அவரது இடத்தை நிரப்புவதற்கான வீரரை முடிவு செய்யாமலேயே தூக்கியது அணி நிர்வாகம். அதன்பின்னர் கண்டுபிடிக்கமுடியாமலே போய்விட்டது. அதன் எதிரொலிதான் உலக கோப்பை தோல்வி. 

மிடில் ஆர்டர் சொதப்பலால்தான் இந்திய அணி உலக கோப்பையில் தோற்க நேரிட்டது. இந்திய அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை செய்த யுவராஜ் சிங்கை, அணி நிர்வாகம் ஓரங்கட்டிய விதம் வருத்தத்திற்குரியதுதான். 

இந்நிலையில், தான் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டது குறித்து யுவராஜ் சிங் மனம் திறந்துள்ளார். ஆஜ் டாக்கிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், யுவராஜ் சிங் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து பேசிய யுவராஜ், கடைசியாக நான் ஆடிய 8-9 ஆட்டங்களில் 2 ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தும் கூட, நான் அணியிலிருந்து ஓரங்கட்டப்படுவேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் நான் காயமடைந்திருந்தேன். எனினும் இலங்கை தொடருக்கு தயாராகுமாறு என்னிடம் அணி நிர்வாகம் கூறியிருந்தது. 

நானும் இலங்கை தொடருக்கு தயாரானேன். அப்போது தான் யோ யோ டெஸ்ட் அறிமுகப்படுத்தப்படுகிறது. யோ யோ டெஸ்ட்டில் கலந்துகொள்ளுமாறு பணிக்கப்பட்டேன். 36 வயதில் யோ யோ டெஸ்ட்டிலும் தேர்வானேன். யோ யோ டெஸ்ட்டில் தேர்வாகியும் கூட, என்னை உள்நாட்டு போட்டிகளில் ஆட சொன்னார்கள். 36 வயதில் நான் யோ யோ டெஸ்ட்டில் தேறமாட்டேன் என்று அணி நிர்வாகத்தினர் நினைத்திருக்கிறார்கள். ஆனால் நான் ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் தேறிவிட்டேன். அதை சற்றும் எதிர்பார்த்திராத அணி நிர்வாகம், என்னை உள்நாட்டு போட்டிகளில் ஆட சொல்லி ஓரங்கட்டினர். 

17 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிவரும் ஒரு வீரரை இவ்வாறு மோசமாக நடத்துவது துரதிர்ஷ்டவசமானதுதான். நான் மட்டுமல்ல, சேவாக், ஜாகீர் கான் உள்ளிட்ட சில வீரர்களும் இப்படித்தான் கழட்டிவிடப்பட்டார்கள். இந்திய அணிக்கு நிறைய பங்களிப்பு செய்த வீரர்களை ஓரங்கட்டுவதென்றால், அணி நிர்வாகம் அவர்களை அழைத்து பேசி, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்போகிறோம் என்ற திட்டத்தை வெளிப்படையாக கூறிவிடலாம். ஆனால் அதைவிடுத்து திடீரென காரணமே இல்லாமல் ஓரங்கட்டுவது சரியான செயல் அல்ல என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.