யுவராஜ் சிங் ஓரங்கட்டப்பட்ட பிறகு இந்திய அணியில் நான்காம் வரிசை பேட்டிங்கிற்கு நிரந்தர தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்னையால்தான் உலக கோப்பையில் இந்திய அணி தோற்கவே நேரிட்டது. உலக கோப்பைக்கு பின்னர் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்டது. அவரும் இதுவரை கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி சிறப்பாக ஆடிவருகிறார். 

எனவே நான்காம் வரிசையில் இனிமேல் ஷ்ரேயாஸ் ஐயரே இறக்கப்பட வாய்ப்புள்ளது. அந்த இடத்தை அவரும் பிடித்துவிட்டார். ஆனால் உலக கோப்பையில் இந்திய அணியில் திறமையான அனுபவமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் நான்காம் வரிசையில் இறங்காதது இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தது. 

விஜய் சங்கர், ரிஷப் பண்ட் என அனுபவமற்ற வீரர்கள் நான்காம் வரிசையில் இறக்கப்பட்டனர். அதன் விளைவைத்தான் இந்திய அணி அரையிறுதியில் அறுவடை செய்தது. உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணி தோற்றதற்கு நான்காம் வரிசையில் தரமான வீரர் இறங்காததே காரணம் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள யுவராஜ் சிங், யார் சிறந்த வீரர் என்பதை அடையாளம் கண்டு அந்த வீரருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். உலக கோப்பையில் நான்காம் வரிசை வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 48. இங்கிலாந்து மாதிரியான சீம் கண்டிஷன்களில், நான்காம் வரிசையில் சிறந்த வீரரைத்தான் இறக்க வேண்டும் என்பதை கேப்டன், பயிற்சியாளர், தேர்வாளர்கள் ஆகியோர் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.

நான்காம் வரிசை பேட்ஸ்மேன் நல்ல பேட்டிங் டெக்னிக்கை கொண்டவராக இருக்க வேண்டும். உலக கோப்பையில் விஜய் சங்கர், ரிஷப் பண்ட் ஆகிய அனுபவமற்ற வீரர்கள் நான்காம் வரிசையில் இறக்கப்பட்டனர். தினேஷ் கார்த்திக் நல்ல அனுபவம் வாய்ந்த வீரர். ஆனால் அவருக்கு லீக் சுற்றில் ஆட வாய்ப்பே கொடுக்காமல், திடீரென அரையிறுதியில் நான்காம் வரிசையில் இறக்கப்பட்டார். அணியில் தனக்கான நிரந்தர இடமே இல்லை எனும்போது எந்த வீரராலும் சரியாக ஆடமுடியாது. அதுதான் இந்திய அணி உலக கோப்பையில் தோற்றதற்கு முக்கியமான காரணம் என்று யுவராஜ் சிங் தெரிவித்தார். 

2011ல் இந்திய அணி உலக கோப்பையை வென்றபோது மிடில் ஆர்டரில் யுவராஜ் சிங், ரெய்னா, தோனி ஆகிய அனுபவமும் திறமையும் வாய்ந்த வீரர்கள் வரிசைகட்டி இருந்தனர். எனவே ஒருவர் விட்டாலும் ஒருவர் நிலைத்து நின்று அணியை காப்பாற்றிவிடுவர். 2011 உலக கோப்பையின் தொடர் நாயகன் யுவராஜ் சிங், இந்திய அணியில் இருந்த நான்காம் வரிசை சிக்கலே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.