இந்திய அணியில் தோனிக்கு கிடைத்த ஆதரவு, தான் உட்பட 5 சிறந்த வீரர்களுக்கு கிடைக்கவில்லை என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவர் யுவராஜ் சிங். இந்திய அணிக்காக 40 டெஸ்ட், 304 ஒருநாள், 58 டி20 போட்டிகளில் ஆடிய யுவராஜ் சிங், மிடில் ஆர்டரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தவர். தோனி தலைமையில் இந்திய அணி 2007ல் டி20 உலக கோப்பை மற்றும் 2011ல் ஒருநாள் உலக கோப்பையை வென்றபோது யுவராஜ் சிங் தான் அந்த 2 தொடர்களிலும் முக்கியமான பங்களிப்புகளை செய்தார். 2011 உலக கோப்பையின் தொடர் நாயகனே யுவராஜ் சிங் தான்.

இந்திய அணிக்காக எத்தனையோ முக்கியமான போட்டிகளை யுவராஜ் சிங் ஜெயித்து கொடுத்திருந்தாலும், 2014 டி20 உலக கோப்பை ஃபைனலில் சொதப்பியதன் விளைவாக அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். 2014 டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்தியாவும் இலங்கையும் மோதின. அந்த போட்டியில் யுவராஜ் சிங் படுமந்தமாக பேட்டிங் ஆடினார். அந்த போட்டியில் ரன் அடிக்க முடியாமல் திணறிய யுவராஜ் சிங் 21 பந்தில் வெறும் 11 ரன்கள் மட்டுமே அடித்தார். அதனால் அந்த போட்டியில் 130 ரன்கள் மட்டுமே அடித்த இந்திய அணி ஃபைனலில் தோற்றது.

அந்த போட்டியில் யுவராஜ் சிங்கின் பேட்டிங் கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், அந்த போட்டியில் ஸ்கோர் செய்ய முடியாமல் திணறியதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார் யுவராஜ் சிங்.

இதுகுறித்து பேசிய யுவராஜ் சிங், 2014 டி20 உலக கோப்பையில் எனது நம்பிக்கை மிகவும் குறைவாக இருந்தது. நான் அணியிலிருந்து நீக்கப்படலாம் என்ற சூழல் நிலவியது. நான் சரியாக ஆடாததற்கு அதை காரணமாக சொல்லவில்லை. ஆனால் அணி நிர்வாகத்திடமிருந்து எனக்கு ஆதரவு கொஞ்சம்கூட கிடைக்கவில்லை. ஃபைனலில் என்னால் பந்தை அடித்து ஆடமுடியவில்லை. ஆஃப் ஸ்பின்னர்களை அடித்து ஆடத்தான் முயன்றேன். ஆனால் டாட் பந்துகளாக போனது. நான் அவுட்டாகிவிடலாம் என்றுகூட நினைத்தேன். ஆனால் அவுட்டும் ஆகமுடியவில்லை. அத்துடன் எனது கெரியர் முடிந்துவிட்டது என்று நானே நினைத்தேன். அதுதான் வாழ்க்கை. பாராட்டுகளும் வெகுமானங்களும் கிடைக்கும்போது ஏற்றுக்கொள்வதை போல, தோல்விகளையும் சரிவுகளையும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

பயிற்சியாளர் மற்றும் கேப்டனின் ஆதரவு இருந்தால் கண்டிப்பாக ஒரு வீரருக்கு அது உதவும். தோனியின் கெரியர் முடியும் வரை அணி நிர்வாகத்தின் ஆதரவு அவருக்கு இருந்தது. ரவி சாஸ்திரி மற்றும் கோலி ஆகிய இருவரும் அவருக்கு ஆதரவாக இருந்தனர். தோனிக்கு கிடைத்த அந்த ஆதரவு எல்லாருக்கும் கிடைப்பதில்லை. ஹர்பஜன் சிங், சேவாக், லக்‌ஷ்மண், கம்பீர் ஆகிய சிறந்த வீரர்களுக்கு அந்த ஆதரவு கிடைக்கவில்லை. பேட்டிங் ஆடும்போது, நமது கழுத்துக்கு மேல் கயிறு தொங்கினால், பேட்டிங்கில் எப்படி கவனம் செலுத்த முடியும். இவையெல்லாம் நான் நொண்டிச்சாக்காக சொல்லவில்லை. 2011க்கு பிறகு இந்திய கிரிக்கெட்டில் சூழல் மாறியது என்று யுவராஜ் சிங் தெரிவித்தார்.