கடந்த இரண்டு சீசன்களாகவே ஐபிஎல்லில் கிறிஸ் லின் சரியாக ஆடவில்லை. ஏதாவது ஒன்றிரண்டு போட்டியில்தான் சொல்லும்படியாக ஆடினார். அவரிடம் இருந்து கேகேஆர் அணி எதிர்பார்த்த அதிரடி தொடக்கத்தை, சீராகவும் நிலையாகவும் கிறிஸ் லின் வழங்காததால், கேகேஆர் அணி அவரை கழட்டிவிட்டுள்ளது.

இந்நிலையில், அபுதாபி டி10 லீக்கில் மராத்தா அரேபியன்ஸ் அணியில் ஆடிவரும் கிறிஸ் லின், அபுதாபி அணிக்கு எதிரான போட்டியில் காட்டடி அடித்தார். 18 பந்துகளில் அரைசதம் அடித்த லின், 30 பந்துகளில் 91 ரன்களை குவித்தார். ஸ்டிரைக் ரேட் 303. அதிரடியாக ஆடிய லின், பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி மிரட்டினார். டி10 போட்டியில் லின் அடித்த இதுதான் அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன் அலெக்ஸ் ஹேல்ஸ் 32 பந்துகளில் 87 ரன்கள் அடித்ததுதான் டி10 போட்டியில் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதை முறியடித்து டாப் ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார் லின்.

கேகேஆர் அணி லின்னை கழட்டிவிட்ட நிலையில், டி10 போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை அடித்து சாதனை படைத்துள்ள நிலையில், லின்னை கேகேஆர் அணி கழட்டிவிட்டது தவறான முடிவு என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 

கிறிஸ் லின் ஆடும் அதே மராத்தா அரேபியன்ஸ் அணியில் தான் யுவராஜ் சிங்கும் ஆடிவருகிறார். இந்நிலையில், லின் குறித்து பேசிய யுவராஜ் சிங், கிறிஸ் லின் அபாரமாக ஆடினார். வியக்கத்தக்க ஷாட்டுகளை ஆடினார். ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்கு பல அதிரடி தொடக்கங்களை அமைத்து கொடுத்துள்ளார் லின். அப்படியிருக்கையில், அவரை ஏன் அந்த அணி தக்கவைக்கவில்லை என தெரியவில்லை. லின்னை விடுவித்த கேகேஆரின் முடிவு தவறானது. இதுகுறித்து ஷாருக்கானுக்கு(கேகேஆர் அணியின் உரிமையாளர்) மெசேஜ் செய்ய வேண்டும் என யுவராஜ் சிங் தெரிவித்தார்.