ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டுவதற்காக முன்னாள் ஜாம்பவான்கள் ஆடும் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடக்கிறது. 

பாண்டிங் தலைமையிலான அணியும் கில்கிறிஸ்ட் தலைமையிலான அணியும் இந்த போட்டியில் மோதுகின்றன. 

பாண்டிங் அணி:

மேத்யூ ஹைடன், ஜஸ்டின் லாங்கர், ரிக்கி பாண்டிங்(கேப்டன்), லிட்ச்ஃபீல்டு, பிரயன் லாரா, அலெக்ஸ் பிளாக்வெல், பிராட் ஹேடின்(விக்கெட் கீப்பர்), டேனியல் கிறிஸ்டியன், லூக் ஹாட்ஜ், பிரெட் லீ, வாசிம் அக்ரம். 

கில்கிறிஸ்ட் அணி: 

ஆடம் கில்கிறிஸ்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷேன் வாட்சன், பிராட் ஹாட்ஜ், யுவராஜ் சிங், எலிஸ் வில்லானி, ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், கேமரூன் ஸ்மித், நிக் ரீவோல்ட், பீட்டர் சிடில், ஃபவாத் அகமது, குர்ட்னி வால்ஷ். 

இந்த போட்டியில் டாஸ் வென்ற கில்கிறிஸ்ட், பாண்டிங் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். பாண்டிங் அணியின் தொடக்க வீரர்களாக ஜஸ்டின் லாங்கரும் மேத்யூ ஹைடனும் களமிறங்கினர். 

இன்னிங்ஸின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த லாங்கர், மொத்தமாகவே 4 பந்துகள் மட்டுமே பேட்டிங் ஆடினார். அவர் ஆடிய நான்காவது பந்தில் குர்ட்னி வால்ஷின் பந்தில் கிளீன் போல்டானார். இதையடுத்து ஹைடனுடன் கேப்டன் பாண்டிங் ஜோடி சேர்ந்தார். 

பாண்டிங் அடித்து ஆட, சரியாக ஷாட் கனெக்ட் ஆகாமல் திணறிவந்த ஹைடன், யுவராஜ் சிங் வீசிய ஐந்தாவது ஓவரில் மூன்றாவது பந்தில் இறங்கிவந்து லாங் ஆஃபில் ஒரு சிக்ஸர் அடித்தார். அதற்கு அடுத்த பந்திலேயே ஹைடனின் விக்கெட்டை வீழ்த்தி பதிலடி கொடுத்தார் யுவராஜ் சிங். 

இதையடுத்து அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த பாண்டிங்கும் 14 பந்தில் 26 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் பிரயன் லாரா களத்திற்கு வந்து, பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி தள்ளினார். 11 பந்தில் 30 ரன்கள் அடித்து அவர் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார்.