இந்திய அணியின் நான்காம் வரிசை சிக்கலுக்கு தீர்வு கிடைத்துவிட்டதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 

உலக கோப்பைக்கு முன்னதாக நான்காம் வரிசையில் பல வீரர்கள் பரிசோதிக்கப்பட்டு ஒருவழியாக ராயுடு உறுதி செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் ராயுடுவின் வாய்ப்பை தட்டிச்சென்றார் விஜய் சங்கர். 

உலக கோப்பை அணியில் விஜய் சங்கர் இடம்பெற்றிருந்தாலும் ஆடும் லெவனில் முதலில் சில போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ராகுல் தான் நான்காம் வரிசையில் ஆடிவந்தார். தவான் காயத்தால் தொடரிலிருந்து விலகியதால் ராகுல் தொடக்க வீரராக களமிறங்க நேரிட்டதை அடுத்து விஜய் சங்கர் நான்காம் வரிசையில் இறக்கப்பட்டார். 

ஆனால் விஜய் சங்கர் தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பிற்கு அர்த்தம் சேர்த்து அதை நியாயப்படுத்தவில்லை. இதையடுத்து தவானுக்கு பதிலாக இந்திய அணியில் இணைந்திருந்த ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நான்காம் வரிசையில் இறக்கப்பட்டார். அந்த போட்டியில் ஓரளவிற்கு ஆடிய ரிஷப், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் அதிரடியாக ஆடி 48 ரன்களை சேர்த்தார். ஆனால் அரைசதம் அடிக்கமுடியாமல் அவுட்டாகிவிட்டார்.

இந்நிலையில், நான்காம் வரிசையில் ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கில் திருப்தியடைந்த யுவராஜ் சிங், இந்திய அணியின் நான்காம் வரிசை சிக்கலுக்கு தீர்வு கிடைத்துவிட்டது என்றும் ரிஷப் பண்ட்டை நான்காம் வரிசைக்கு இன்னும் சிறப்பாக தயார்ப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.