பாகிஸ்தான் முன்னாள் வீரர் அஃப்ரிடி எப்போதுமே இந்தியாவுக்கு எதிராகவும் காஷ்மீர் குறித்தும் சர்ச்சை கருத்துகளை பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் அப்படி பேசவில்லை என்றால் தான் ஆச்சரியம். அவர் சர்ச்சையாக பேசும்போதெல்லாம் இந்தியாவிலிருந்து எதிர்ப்பு தெரிவிப்பது கம்பீராக மட்டுமே இருக்கும்.

ஆனால் இந்த முறை சற்று அதிகப்பிரசங்கித்தனமாக பிரதமர் மோடி குறித்து பேசியதால் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அஃப்ரிடிக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் அஃப்ரிடிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒரு கிராமத்திற்கு சென்ற அஃப்ரிடி, இது அழகான ஒரு கிராமம். இங்கு வந்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் இங்கு வர வேண்டும் என நீண்டகாலமாக நினைத்தேன். இன்றுதான் வர முடிந்தது. உலகமே கொடும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதைவிட மோசமான நோய் மோடியின் மைண்ட் தான் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். 

அஃப்ரிடியின் கருத்துக்கு பதிலடி கொடுத்து டுவீட் செய்துள்ள யுவராஜ் சிங், இது உண்மையாகவே அதிருப்தியளிக்கும் சம்பவம். அஃப்ரிடி அப்படி பேசியிருக்கூடாது. இந்தியனாகவும், இந்திய அணிக்காக ஆடியிருக்கிறேன் என்ற வகையிலும், பிரதமர் மோடியை பற்றி அஃப்ரிடி பேசியதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். இனிமேல் இப்படி நடக்கக்கூடாது. ஜெய்ஹிந்த் என யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளார்.

 

ஹர்பஜன் சிங்கும், அஃப்ரிடி அவரது நாட்டுடன் இருக்க வேண்டும். லிமிட்டை தாண்டி ஓவராக பேசக்கூடாது என்று அஃப்ரிடியை கண்டித்துள்ளார்.