சூர்யகுமார் யாதவ் ஹாட்ரிக் கோல்டன் டக்! ODI உலக கோப்பையில் 4ம் வரிசையில் யார் இறங்கலாம்? யுவராஜ் சிங் கருத்து
ஷ்ரேயாஸ் ஐயர் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவுள்ள அதேவேளையில், சூர்யகுமார் யாதவ் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டான நிலையில், ஒருநாள் உலக கோப்பையில் 4ம் வரிசையில் யார் இறங்கலாம் என்று யுவராஜ் சிங் கருத்து கூறியுள்ளார்.
இந்திய அணியின் அதிரடி வீரரும், டி20 கிரிக்கெட்டின் மிகப்பெரிய மேட்ச் வின்னருமான சூர்யகுமார் யாதவ், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சமகாலத்தின் சிறந்த வீரராக பார்க்கப்படுகிறார். ஆனால் அவர் டி20 கிரிக்கெட்டில் ஜொலிக்கும் அளவிற்கு ஒருநாள் கிரிக்கெட்டில் ஜொலிக்கவில்லை.
டி20 கிரிக்கெட்டில் 48 போட்டிகளில் 3 சதங்களுடன் 1675 ரன்களை குவித்துள்ள சூர்யகுமார் யாதவ், ஒருநாள் கிரிக்கெட்டில் 23 போட்டிகளில் ஆடி வெறும் இரண்டே அரைசதங்களுடன் 433 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் வழக்கமாக 4ம் வரிசையில் ஆடும் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடாததால் இந்த தொடரில் 4ம் வரிசையில் இறங்க வாய்ப்பு பெற்றார் சூர்யகுமார் யாதவ். ஆனால் யாருமே எதிர்பார்த்திராத விதமாக 3 போட்டிகளிலும் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி விரும்பத்தகாத பட்டியலிலும் இணைந்தார்.
ஷ்ரேயாஸ் ஐயர் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவுள்ளதால் ஒருநாள் உலக கோப்பையில் ஆடமாட்டார் என்று தெரிகிறது. ஒருநாள் அணியில் 4ம் வரிசையில் அவர் செட் ஆகியிருந்த நிலையில், அவர் ஆடமுடியாத பட்சத்தில் அந்த வரிசையில் சூர்யகுமார் யாதவ் தான் இந்திய அணியின் முதன்மை ஆப்சனாக இருக்கிறார். ஆனால் அவரும் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டானதால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது சராசரி வெறும் 22 ஆகும். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் 66 என்ற சிறந்த சராசரியை வைத்துள்ள சஞ்சு சாம்சனை இந்திய அணி வேண்டுமென்றே புறக்கணிப்பதாகவும், சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக அவரை ஆடவைக்கவேண்டும் என்றும் சாம்சனுக்கு ஆதரவு பெருகியது.
ஆனால் சூர்யகுமார் யாதவை சஞ்சு சாம்சனுடன் ஒப்பிடக்கூடாது என்று கபில் தேவ் தெரிவித்திருந்தார். இந்த விஷயத்தில் கடைசியாக இந்திய அணி நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும். அந்தவகையில் இந்திய அணி நிர்வாகம் சூர்யகுமார் யாதவ் மீது நம்பிக்கை வைத்து ஆதரவளிக்கிறது. கடந்த 2019 ஒருநாள் உலக கோப்பையில் 4ம் வரிசை பேட்டிங் ஆர்டர் தான் பிரச்னையாக இருந்தது. இப்போது ஷ்ரேயாஸ் ஐயரின் காயம் காரணமாக, 2023 ஒருநாள் உலக கோப்பைக்கு முன்பாகவும் அதே பிரச்னை எழுந்துள்ளது.
IPL 2023: இந்த முறை கோப்பையை தூக்கியே தீரணும்..! ஆர்சிபி அணியின் வலுவான ஆடும் காம்பினேஷன்
இந்நிலையில், இதுகுறித்து கருத்து கூறியுள்ள 4ம் வரிசைக்கே பெயர்போன யுவராஜ் சிங், எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களது கெரியரில் ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்யும். நாங்கள் அனைவருமே அதை சந்தித்திருக்கிறோம். சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் முக்கியமான வீரர். ஒருநாள் உலக கோப்பையில் அவர் முக்கியமான ரோல் வகிப்பார். எனவே அவருக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும். சூர்யகுமார் யாதவ் மீண்டும் வெகுண்டெழுவார் என்று யுவராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.