ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக ஜொலிக்கும் ரோஹித் சர்மாவிற்கு, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தொடக்க வீரராக இறங்கும் முதன்முறையாக கிடைத்துள்ளது. டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவந்த ரோஹித் சர்மாவிற்கு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராக இறங்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனக்கான இடத்தை டெஸ்ட் அணியிலும் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ரோஹித் சர்மா இருக்கிறார். எனவே ரோஹித் சர்மாவின் மீதே அனைவரின் கண்களும் இருக்கின்றன. ரோஹித் சர்மாவும் நெருக்கடியில் இருக்கிறார். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல், பேட்டிங் டெக்னிக்கை மாற்றாமல் அவரது இயல்பான ஆட்டத்தை ஆட வேண்டும் என்பது முன்னாள் ஜாம்பவான்களின் அறிவுரை. 

இந்நிலையில், ரோஹித் சர்மா குறித்து பேசியுள்ள யுவராஜ் சிங், ரோஹித் சர்மா டெஸ்ட் கெரியரை தொடங்கியபோதே தொடக்க வீரராக இறக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து. ஒரு போட்டியில் ஆடவைத்து, அடுத்த போட்டியில் உட்கார வைத்துவிட்டு அவர் சரியாக ஆடவில்லை, ஸ்கோர் செய்யவில்லை என்றால் எப்படி.? இதுதான் இதுவரை ரோஹித் விஷயத்தில் நடந்துவந்தது. 10 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக ஆடவிடாமால் ஒரு வீரரிடமிருந்து சிறந்த ஆட்டத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்..?

ரோஹித் சர்மாவை தொடர்ச்சியாக 6 டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக இறக்க வேண்டும். அவரை அழைத்து, 10-12 இன்னிங்ஸ்கள் தொடர்ந்து ஆடப்போகிறீர்கள். உங்களை யாரும் எதுவும் கேட்கமாட்டார்கள். உங்களது இயல்பான ஆட்டத்தை ஆடுங்கள் என்று கூறிவிட வேண்டும். கேஎல் ராகுலுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுவிட்டது. எனவே யாரை தொடக்க வீரராக இறக்கினாலும் சரி, குறைந்தது 6 போட்டிகள் ஆட விட வேண்டும் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.