Asianet News TamilAsianet News Tamil

உனக்கு தான் ஏற்கனவே சொல்லிட்டேன்ல.. திரும்ப திரும்பவா சொல்ல முடியும்..? ஹர்பஜனை ஊறுகாயாக்கி அணி நிர்வாகத்தை நக்கலடித்த யுவராஜ்

இளம் வீரர் சூர்யகுமார் யாதவிற்கு இந்திய அணியில் இன்னும் இடமளிக்கப்படாததை விமர்சித்து ஹர்பஜன் சிங் செய்த டுவீட்டுக்கு, யுவராஜ் சிங் அணி நிர்வாகத்தை விளாசும் வகையில் மீண்டும் நக்கலாக கருத்து தெரிவித்துள்ளார். 

yuvraj singh again slams indian team management
Author
India, First Published Oct 1, 2019, 4:03 PM IST

யுவராஜ் சிங் ஓரங்கட்டப்பட்ட பிறகு இந்திய அணியில் நான்காம் வரிசை பேட்டிங்கிற்கு நிரந்தர தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்னையால்தான் உலக கோப்பையில் இந்திய அணி தோற்கவே நேரிட்டது. உலக கோப்பைக்கு பின்னர் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்டது. அவரும் இதுவரை கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி சிறப்பாக ஆடியுள்ளார். 

இதற்கிடையே, நடந்துவரும் விஜய் ஹசாரே தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிவரும் சூர்யகுமார் யாதவ், சத்தீஸ்கர் அணிக்கு எதிரான போட்டியில் காட்டடி அடித்தார். 31 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 81 ரன்களை குவித்தார். அந்த போட்டியில் மும்பை அணி தோற்றது ஒருபுறம் இருந்தாலும், சூர்யகுமார் யாதவின் அதிரடியான பேட்டிங், பார்க்கவே வியப்பாகவும் கண்களுக்கு குளிர்ச்சியாகவும் இருந்தது. 

இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் அபாரமாக ஆடிவருகிறார். ஆனால் இந்திய அணி இவருக்கெல்லாம் வாய்ப்பு கொடுக்காமல் இன்னும் 4ம் வரிசை வீரரை தேடிக்கொண்டிருக்கிறது என்ற வாசகம் அடங்கிய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஹர்பஜன் சிங், உள்நாட்டு போட்டிகளில் அதிகமான ரன்களை குவித்துக்கொண்டே இருக்கும் சூர்யகுமார் யாதவுக்கு ஏன் இன்னும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை. தொடர்ந்து இதே மாதிரி கடினமாக உழையுங்கள் சூர்யகுமார்.. உங்களுக்கான நேரம் வரும் என்று அவரை ஊக்கப்படுத்தும் விதமாக ஹர்பஜன் சிங் டுவீட் செய்திருந்தார். 

அதற்கு யுவராஜ் சிங், நான் தான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னேன்ல.. அவர்களுக்கு(அணி நிர்வாகத்தை குறிப்பிடுகிறார்) நான்காம் வரிசை வீரர் தேவையில்லை. அதுதான் டாப் ஆர்டர் வலுவா இருக்குதுல.. என்று நக்கலாக பதிவிட்டுள்ளார். 

ஏற்கனவே சஞ்சு சாம்சனை நான்காம் வரிசையில் இறக்கலாம் என்று ஹர்பஜன் சிங் போட்டிருந்த டுவீட்டிற்கு, டாப் ஆர்டர் வலுவாக இருப்பதால், அவர்களுக்கு நான்காம் வரிசை பேட்ஸ்மேன் தேவையில்லை என்று நக்கலாக பதிலளித்திருந்தார். தற்போது அதை சுட்டிக்காட்டித்தான் மீண்டும் பதிவிட்டுள்ளார். 

ரோஹித், தவான், கோலி என இந்திய அணியின் டாப் ஆர்டர் வலுவாக இருக்கும் மெதப்பில் தான் இந்திய அணி, நான்காம் வரிசை வீரரை உறுதி செய்யாமல் உலக கோப்பைக்கு சென்றது. அரையிறுதியில் ரோஹித், கோலி என டாப் ஆர்டர் படுமோசமாக சொதப்பியதை அடுத்து இந்திய அணி தோற்று வெளியேறியது. அதன்பின்னர் தான் நான்காம் வரிசை பேட்ஸ்மேனுக்கான முக்கியத்துவத்தை அணி நிர்வாகம் உணர்ந்தது எனலாம். ஆனால் அணி நிர்வாகம் இன்னும், நான்காம் வரிசையின் முக்கியத்துவத்தை உணரவில்லை என்கிற ரீதியில்தான் யுவராஜ் சிங்கின் டுவீட் உள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios