அண்மையில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றிலிருந்து ஓய்வுபெற்ற இந்திய அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், ஓய்வு அறிவித்த பின்னர் பிசிசிஐயிடம் அனுமதி பெற்று கனடா டி20 லீக் தொடரில் ஆடிவருகிறார். 

கனடா டி20 லீக் தொடரில் டொரண்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் உள்ளார். அந்த அணியில் பொல்லார்டு, கிளாசன், மெக்கல்லம் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் உள்ளனர். கடந்த 25ம் தேதி தொடங்கி இந்த தொடர் நடந்துவருகிறது. 

கெய்ல் தலைமையிலான வான்கூவர் நைட்ஸ் அணியுடன் ஆடிய முதல் போட்டியில் 27 பந்துகளில் வெறும் 14 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றிய யுவராஜ் சிங், அதன்பின்னர் எட்மாண்டன் ராயல்ஸ் அணியுடன் ஆடிய போட்டியில் 24 பந்துகளில் 41 ரன்களை அடித்து அசத்தினார். 

இந்நிலையில், வின்னிபெக் ஹாக்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் யுவராஜ் சிங் அபாரமாக ஆடியுள்ளார். இந்த போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான டொரண்டோ நேஷனல்ஸ் அணி தான் முதலில் பேட்டிங் ஆடியது. டொரண்டோ அணியின் தொடக்க வீரர் தாமஸ் 46 பந்துகளில் 65 ரன்களை குவித்தார். ஆனால் கிளாசன் இந்த போட்டியில் ஏமாற்றமளித்தார். கிளாசன் ஏமாற்றினாலும் கேப்டன் யுவராஜ் ஏமாற்றவில்லை. கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் அடித்து ஆடி ரன்களை குவித்தார். 

26 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 45 ரன்களை குவித்தார். ஐபிஎல்லில் சரியாக ஆடமுடியாமல் திணறிவந்த யுவராஜ் சிங், கனடா டி20 லீக்கில் சிறப்பாக ஆடிவருகிறார். எந்தவித தயக்கமும் தடுமாற்றமும் இல்லாமல் பழைய யுவராஜ் சிங்காக ஆடிவருகிறார். யுவராஜ் சிங் மட்டுமல்லாமல் இந்த போட்டியில் பொல்லார்டும் சிறப்பாக ஆடி 21 பந்துகளில் 52 ரன்களை குவித்தார். இதையடுத்து 20 ஓவர் முடிவில் டொரண்டோ நேஷனல்ஸ் அணி 216 ரன்களை குவித்தது. 

217 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வின்னிபெக் ஹாக்ஸ் அணியின் முதல் 3 வீரர்கள் அபாரமாக ஆடி ரன்களை குவித்தனர். தொடக்க வீரர் கிறிஸ் லின் வெறும் 48 பந்துகளில் 89 ரன்களை குவித்தார். ரன் அவுட்டாகி சதத்தை தவறவிட்டார் லின். மற்றொரு தொடக்க வீரர் ஷாய்மான் அன்வர் 21 பந்துகளில் 43 ரன்களை குவித்தார். மூன்றாவது வீரர் சன்னி சோஹலும் அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 58 ரன்களை குவித்தார். இவர்கள் மூவருமே சிறப்பாக ஆடி அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்துவிட்டதால், அதன்பின்னர் வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட்டான போதிலும் வின்னிபெக் ஹாக்ஸ் அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றுவிட்டது.