முஷ்டாக் அலி தொடர் நேற்று தொடங்கியது. இதில் பரோடா மற்றும் கோவா அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பரோடா அணி 20 ஓவரில் 149 ரன்கள் அடித்தது. கோவா அணி 150 ரன்கள் என்ற இலக்கை கடைசி ஓவரில் எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் 36 வயதான யூசுஃப் பதான், ஷார்ட் கவர் திசையில் ஃபீல்டிங் செய்தபோது, செம டைவ் அடித்து அபாரமான ஒரு கேட்ச்சை பிடித்தார். அதிரடியாக ஆடி 18 பந்தில் 27 ரன்கள் அடித்த தர்ஷன் மிசலை தனது சிறப்பான கேட்ச்சின் மூலம் யூசுஃப் பதான் பெவிலியனுக்கு அனுப்பினார். 

தர்ஷன் கவர் திசையில் அடித்த பந்தை, ஷார்ட் கவரில் ஃபீல்டிங் செய்த யூசுஃப் பதான் அபாரமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். அந்த கேட்ச்சை கண்டு வியந்த அவரது தம்பியும் கிரிக்கெட் வீரருமான இர்ஃபான் பதான், இது பறவையா? இல்லை யூசுஃப் பதான்.. உனது கடின உழைப்பின் பலன் தான் இது என்று டுவீட் செய்துள்ளார். 

யூசுஃப் பதான் 2007ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டுவரை இந்திய அணியில் ஆடினார். அதன்பின்னர் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. யூசுஃப் பதான் மற்றும் இர்ஃபான் பதான் ஆகிய பதான் சகோதரர்கள் இந்திய கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இருவருக்குமே இந்திய அணியில் நீண்டகாலம் ஆடி முதன்மை வீரர்களாக ஜொலிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.