IPL 2023: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை சதம்.. தனி ஒருவனாக RR அணியை கரைசேர்த்த ஜெய்ஸ்வால்..! MI-க்கு கடின இலக்கு
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அபாரமான சதத்தால் 20 ஓவரில் 212 ரன்களை குவித்து, 213 ரன்கள் என்ற கடின இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்தது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஐபிஎல்லின் 1000வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், திலக் வர்மா, ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ரைலீ மெரிடித், அர்ஷத் கான்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், த்ருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், சந்தீப் ஷர்மா, டிரெண்ட் போல்ட்.
முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர்(18), சஞ்சு சாம்சன்(14), தேவ்தத் படிக்கல்(2), ஜேசன் ஹோல்டர் (11), ஹெட்மயர்(8) என அனைத்து வீரர்களும் ஒருமுனையில் சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, மறுமுனையில் தனி ஒருவனாக நிலைத்து நின்று அதிரடியாக பேட்டிங் ஆடிய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்தார்.
இதன்மூலம் ஐபிஎல்லில் இளம் வயதில் சதமடித்த 4வது வீரர் என்ற சாதனையை படைத்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். 21 வயது 123 நாட்கள் நடப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்துள்ளார். இதன்மூலம் 22 வயதில் சதமடித்த சஞ்சு சாம்சனை 5ம் இடத்திற்கு தள்ளி 4ம் இடத்தை பிடித்துள்ளார் ஜெய்ஸ்வால். மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய மூவரும் முதல் 3 இடங்களில் உள்ளனர்.
சதத்திற்கு பின்னரும் அடித்து ஆடிய ஜெய்ஸ்வால், ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசினார். கடைசி ஓவரில் 2 பவுண்டரி அடித்த ஜெய்ஸ்வால் அதே ஓவரில் ஆட்டமிழந்தார். 62 பந்தில் 16 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 124 ரன்களை குவித்தார். தேசிய அணியில் இடம்பிடிக்காத ஒரு வீரர் ஐபிஎல்லில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.
யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அபாரமான சதத்தால் 20 ஓவரில் 212 ரன்களை குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 213 ரன்கள் என்ற கடின இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்தது.