விளையாட்டாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த துறையாக இருந்தாலும் சரி, பெரிதாக சாதித்தவர்கள் அனைவருமே ஒரு காலத்தில் படுமோசமான கஷ்டங்களை அனுபவித்தவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் அனுபவித்த கஷ்டங்களும் எதிர்கொண்ட சங்கடங்களும்தான் அவர்கள் சாதிப்பதற்கு உத்வேகமாக அமைந்திருக்கும். அப்படிப்பட்டவர்களின் பட்டியலில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ஒருநாள் கண்டிப்பாக இணைவார். 

விஜய் ஹசாரே தொடரில் இரட்டை சதமடித்ததன் மூலம் 17 வயதே ஆன இளம் வீரர் ஜெய்ஸ்வால், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 1975ம் ஆண்டில் தென்னாப்பிரிக்க வீரர் ஆலன் பாரோ 20 வயதில் இரட்டை சதமடித்ததுதான் சாதனையாக இருந்தது. 44 ஆண்டுகால சாதனையை முறியடித்து ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த ஏழாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் ஜெய்ஸ்வால் பெற்றார். சச்சின், சேவாக், ரோஹித், தவான், கௌஷால், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு அடுத்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த ஏழாவது இந்திய வீரர் ஜெய்ஸ்வால். 

அண்டர் 19 இந்திய அணியிலும் சிறப்பாக ஆடிவரும் ஜெய்ஸ்வால், விஜய் ஹசாரேவில் மிகவும் சிறப்பாக ஆடி தனது மீதான கவனத்தை அதிகப்படுத்தியுள்ளார். இன்றைக்கு கிரிக்கெட் உலகில் அனைவராலும் கவனிக்கப்படும் ஜெய்ஸ்வால், தனது சிறுவயதில் ரொம்ப கஷ்டப்பட்டுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநில பாதோஹியில் ஒரு சிறிய கடை வைத்திருப்பவரின் மகனான ஜெய்ஸ்வால், கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் சிறு வயதிலேயே மும்பைக்கு சென்றுவிட்டார். மும்பைக்கு சென்ற புதிதில் கையில் காசு இல்லாமல் மிகவும் சிரமப்பட்ட ஜெய்ஸ்வால், ஒரு கடையில்தான் படுத்து உறங்கியுள்ளார். பின்பு அங்கிருந்து வெளியேற்றப்பட்ட ஜெய்ஸ்வால், முஸ்லீம் யுனைடெட் கிளப் ஊழியர்களுடம் ஆசாத் மைதானத்தில் படுத்து உறங்கி காலத்தை கழித்துள்ளார். தனது வருமானத்திற்காக பானிபூரி கடையிலும் சிற்றுண்டி விடுதியிலும் வேலை பார்த்துள்ளார். 

11-12 வயதில் அவர் பேட்டிங் ஆடுவதை கண்ட உள்ளூர் பயிற்சியாளர் ஜ்வாலா சிங் என்பவர், ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கில் கவர்ந்திழுக்கப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு பயிற்சியளித்த ஜ்வாலா சிங், அவரது ஏழ்மை நிலையை அறிந்து அவர் தங்குவதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். தொடர்ந்து பெரிய ஸ்கோராக அடித்து ஜெய்ஸ்வாலை கண்டு பெருமைப்படும் ஜ்வாலா சிங், ஜெய்ஸ்வால் ஒருநாள் கண்டிப்பாக இந்திய அணிக்காக ஆடுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தான் பானிபூரி கடையில் வேலைபார்க்கும்போது, தன்னுடன் ஆடும் மற்ற சிறுவர்கள் அந்த கடைக்கு பானிபூரி சாப்பிடவருவார்களாம். அவர்களுக்கு முன் அந்த கடையில் இருந்து வேலை பார்ப்பது மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும், தனது சூழ்நிலை காரணமாக அதையெல்லாம் தாங்கிக்கொண்டு வேலைபார்த்துள்ளார் ஜெய்ஸ்வால். 

மிகப்பெரிய கொடுமை இளமையில் வறுமை என்பார்கள். அப்படிப்பட்ட மிகப்பெரிய கொடுமையை அனுபவித்த ஜெய்ஸ்வால், தனது ஏழ்மை மற்றும் வறுமை ஆகியவற்றையெல்லாம் வென்று, இன்றைக்கு கிரிக்கெட் உலகில் அனைவரையும் திரும்பப் பார்க்க வைத்துள்ளார். இன்னும் அவர் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. கண்டிப்பாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகப்பெரிய வீரராக ஜொலிப்பார் என்பதில் சந்தேகமில்லை.