WTC Final Race: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவுக்கு எந்த அளவுக்கு வாய்ப்பு உள்ளது? என விரிவாக பார்ப்போம்.
2025-27 ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பாதி கட்டத்தை எட்டியுள்ளது. இனி 33 போட்டிகளே எஞ்சியுள்ளன. போட்டியில் பங்கேற்றுள்ள மொத்தம் 9 அணிகளில் 4 அணிகள் ஃபைனல் பந்தயத்திலிருந்து கிட்டத்தட்ட வெளியேறிவிட்டன. மீதமுள்ள 5 அணிகளே முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கக் கடுமையாகப் போட்டியிடுகின்றன. இதில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு ஃபைனலுக்குச் செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
ஆஸ்திரேலியா முன்னிலை
ஆஸ்திரேலிய அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி, 8 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளது. அந்த அணியின் வெற்றி சதவீதம் 80.00% ஆகும். ஆஸ்திரேலியாவிற்கு இன்னும் 12 போட்டிகள் மீதமுள்ளன. இதில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றாலே, முதல் இரண்டு இடங்களைப் பிடித்து ஃபைனலுக்குத் தகுதி பெற்றுவிடலாம். அந்த அணி நியூசிலாந்துக்கு எதிராக 4, தென்னாப்பிரிக்காவில் 3 மற்றும் இந்தியாவில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
தென்னாப்பிரிக்காவிற்கு அதிக வாய்ப்பு
தற்போதைய சாம்பியனான தென்னாப்பிரிக்கா 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 3 போட்டிகளில் வெற்றியும், 1 போட்டியில் தோல்வியும் பெற்றுள்ளது. அந்த அணிக்கு இன்னும் 10 போட்டிகள் உள்ளன. இதில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றால் ஃபைனலுக்கு முன்னேறலாம். இந்த 10 போட்டிகளில் 8 போட்டிகள் சொந்த மண்ணில் நடைபெறவுள்ளது அந்த அணிக்கு ஒரு பெரிய சாதகமான அம்சமாகும்.
ICC Rankings: நம்பர் 1 இடத்துக்கு டாடா காட்டிய பும்ரா... ஆஸி. வீரர் செஞ்ச மாஸ் சம்பவம்!
நியூசிலாந்துக்கு 7 வெற்றிகள் தேவை
2019-21 முதலாவது சீசனின் சாம்பியனான நியூசிலாந்து அணி, தற்போது புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இந்த முறையில் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 4-ல் வெற்றியும், 1-ல் தோல்வியும், 1 போட்டியை டிராவும் செய்துள்ளது. அந்த அணிக்கு இன்னும் 10 போட்டிகள் மீதமுள்ளன. ஃபைனலுக்குச் செல்ல 6 அல்லது 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். எனினும், இதில் 4 போட்டிகளை ஆஸ்திரேலியாவில் விளையாட வேண்டியிருப்பதால், அந்த அணியின் பாதை அவ்வளவு எளிதாக இருக்காது.
வங்கதேசதுக்கும் வாய்ப்பு உள்ளது
இந்த முறை புள்ளிகள் பட்டியலில் ஆச்சரியமளிக்கும் விதமாக 4-வது இடத்தில் இருக்கும் வங்கதேச அணியும் ஃபைனல் ரேஸில் உள்ளது. அந்த அணி விளையாடிய 6 போட்டிகளில் 3-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும்டைந்துள்ளது. இன்னும் 6 போட்டிகள் எஞ்சியுள்ளன. இதில் 4 டெஸ்ட் போட்டிகளை (இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக) சொந்த மண்ணில் விளையாட உள்ளது. இந்த நான்கு போட்டிகளுடன் சேர்த்து மேலும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், ஃபைனலுக்குச் செல்லும் வாய்ப்பு அந்த அணிக்குக் கிடைக்கும்.
இந்தியா ஃபைனலுக்கு முன்னேறுமா?
இலங்கைக்கு எதிரான கொழும்பு டெஸ்ட் போட்டியை டிரா செய்தது இந்தியாவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தினாலும், உலக டெஸ்ட் ஃபைனலுக்கான கனவு இன்னும் உயிர்ப்புடன் தான் உள்ளது. 2025-27 சீசனில் இந்தியா இதுவரை 11 போட்டிகளில் விளையாடி, 5-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் அடைந்துள்ளது. 2 போட்டிகள் டிரா ஆகியுள்ளன. இன்னும் 7 போட்டிகள் மீதமுள்ளன. நியூசிலாந்தில் 2 மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராகச் சொந்த மண்ணில் 5 போட்டிகள் உள்ளன.
இதில் 6 போட்டிகளில் வெற்றியும், 1 போட்டியில் தோல்வியும் பெற்றால், இந்தியாவின் வெற்றி சதவீதம் 64.8% ஆக உயரும். இதன் மூலம் நேரடியாக ஃபைனலுக்குச் செல்ல முடியும். ஒருவேளை 7-ல் 5 போட்டிகளில் வெற்றி பெற்றால், மற்ற அணிகளின் போட்டி முடிவுகளைப் பொறுத்தே இந்தியாவின் ஃபைனல் வாய்ப்பு தீர்மானிக்கப்படும்.
'அப்பா ராணுவ வீரர், தாத்தா விவசாயி'.. சதத்துக்கு பின் தனது டாட்டூ ரகசியத்தை உடைத்த துருவ் ஜுரல்!
4-வது முறையாக இங்கிலாந்துக்கு வாய்ப்பு இல்லை
இதற்கு முன் நடைபெற்ற 3 சீசன்களிலும் ஃபைனலுக்குச் செல்லத் தவறிய இங்கிலாந்து அணி, இந்த முறையும் லீக் சுற்றோடு வெளியேற அதிக வாய்ப்புள்ளது. அந்த அணி 14 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் அடைந்துள்ளது. மீதமுள்ள 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும், அது ஃபைனலுக்குச் செல்லப் போதுமானதாக இருக்காது.

