WPL 2023 இன்று தொடக்கம்.. போட்டி விதிகள், எந்த சேனலில் பார்க்கலாம்..? முழு விவரம்
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் இன்று தொடங்கும் நிலையில், விதிகல், எந்த சேனலில் பார்க்கலாம் என்ற முழு விவரங்களை பார்க்கலாம்.
2008ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐபிஎல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுவருகிறது. 15 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், உலகின் வெற்றிகரமான மற்றும் பணக்கார டி20 லீக் தொடராக ஐபிஎல் அமைந்துள்ளது. அதனால் இரண்டரை மாதம் மட்டுமே ஆடி கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதால் வெளிநாட்டு வீரர்களும் ஐபிஎல்லில் ஆட ஆர்வம் காட்டுகின்றனர்.
ஐபிஎல்லுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து மகளிர் ஐபிஎல்லும் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டுவந்த நிலையில், இந்த ஆண்டு முதல் மகளிர் பீரிமியர் லீக் தொடர் நடத்தப்படுகிறது.
மகளிர் பிரீமியர் லீக் தொடர் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகளூம் கலந்துகொண்டு ஆடுகின்றன. இந்த சீசனுக்கான ஏலம் கடந்த மாதம் நடத்தப்பட்டது. அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீராங்கனைகளை ஏலத்தில் வாங்கின.
மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசன் இன்று தொடங்கி வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. மார்ச் 31ம் தேதி ஐபிஎல் தொடங்கும் நிலையில், 26ம் தேதியுடன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் முடிவடைகிறது. மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியம் மற்றும் பிரபோர்ன் ஸ்டேடியம் ஆகிய 2 ஸ்டேடியங்களில் தான் மொத்த போட்டிகளும் நடத்தப்படுகின்றன. தினமும் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும். 2 போட்டிகள் நடக்கும் தினத்தன்று, முதல் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கும், 2வது போட்டி இரவு 7.30 மணிக்கும் தொடங்கும்.
அணிகள் 2 டி.ஆர்.எஸ் எடுத்துக்கொள்ளலாம். ஐபிஎல்லில் இந்த ஆண்டு அறிமுகமாகும் இம்பேக்ட் பிளேயராக 12வது வீரரை பயன்படுத்தும் விதி மகளிர் பிரீமியர் லீக்கில் இல்லை. ஐபிஎல்லில் இந்த விதி அறிமுகமான பின், மகளிர் பிரீமியர் லீக்கிலும் இந்த விதி அமல்படுத்தப்படலாம். ஆனால் இப்போதைக்கு இம்பேக்ட் பிளேயர் விதி கிடையாது. ஆட்டம் டை ஆகும் பட்சத்தில் 2 சூப்பர் ஓவர் வரை வீசலாம்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், ஆர்சிபி கேப்டன் ஸ்மிரிதி மந்தனா, டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் மெக் லானிங், குஜராத் ஜெயிண்ட்ஸ் கேப்டன் பெத் மூனி, யுபி வாரியர்ஸ் கேப்டன் அலைஸா ஹீலி ஆவர்.
இன்று முதல் மகளிர் பிரீமியர் லீக் தொடர் தொடங்கும் நிலையில், இன்று நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் குஜராத் ஜெயிண்ட்ஸும் மோதுகின்றன.
மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளை ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் தமிழ் ஆகிய சேனல்களில் நேரலையாக பார்க்கலாம்.