உலக கோப்பையில் நியூசிலாந்து அணியின் ஆதிக்கம் தொடரும் நிலையில், தென்னாப்பிரிக்காவின் சோகம் தொடர்கிறது. 

நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா இடையே நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் டி காக் 5 ரன்களில் இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். டுப்ளெசிஸ் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த ஆம்லா 55 ரன்களிலும் மார்க்ரம் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

வாண்டர் டசன் மட்டுமே தென்னாப்பிரிக்க அணியின் நம்பிக்கையாக திகழ்ந்தார். அந்த நம்பிக்கையை வீணடிக்காமல் சிறப்பாக ஆடிய வாண்டெர் டசன் அரைசதம் அடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிவந்த டேவிட் மில்லர், மந்தமாக ஆடினார். ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் என அவர் அடிக்க ஆரம்பித்தார். ஆனால் அடிக்க ஆரம்பித்ததுமே ஆட்டமிழந்தார். வாண்டெர் டசன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 67ரன்கள் அடிக்க, தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்களில் 241 ரன்கள் அடித்தது. 

242 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் முன்ரோ, கப்டில், டெய்லர், லதாம் என ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் கேப்டன் வில்லியம்சன் அவசரப்படாமல் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். ஜேம்ஸ் நீஷம் வில்லியம்சனுக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடினார். ஆனால் அவரும் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

விக்கெட்டுகள் சரிந்தாலும் வில்லியம்சன் அவசரமோ பதற்றமோ அடையவில்லை. இலக்கு ரொம்ப கடினமானது இல்லை என்பதால் போட்டியை கடைசிவரை எடுத்துச்சென்றால் வென்றுவிடலாம் என்று தெரிந்த வில்லியம்சன், நிதானமாகவும் சிறப்பாகவும் ஆடி கொஞ்சம் கொஞ்சமாக ரன்களை சேர்த்தார். நீஷமின் விக்கெட்டுக்கு பிறகு களத்திற்கு வந்த டி கிராண்ட் ஹோம் அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வில்லியம்சனுக்கு உறுதுணையாக இருந்தார். அரைசதம் அடித்த டி கிராண்ட் ஹோம் 47 பந்துகளில் 60 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

பொறுப்புடன் ஆடி சதமடித்த வில்லியம்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். இதையடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வென்றது. வில்லியம்சன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 138 பந்துகளில் 106 ரன்கள் அடித்திருந்தார். ஆட்டநாயகனாக வில்லியம்சனே தேர்வு செய்யப்பட்டார்.