உலக கோப்பை வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் வைத்திருக்கும் ஒரு சாதனையை முறியடிக்க இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளிலும் ஒவ்வொரு வீரருக்கு வாய்ப்புள்ளது. 

உலக கோப்பை தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இறுதி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவருகிறது. இதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையை வென்றிராத நியூசிலாந்தும் இங்கிலாந்தும் இறுதி போட்டியில் ஆடிவருவதால், இரு அணிகளில் ஒன்று முதன்முறையாக கோப்பையை வெல்லவுள்ளது. 

இந்த உலக கோப்பையில் எதிரணிகளுக்கு மெர்சல் காட்டியவர்கள் ரோஹித் சர்மாவும் வார்னரும் தான். அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா தான். லீக் சுற்றில் 8 இன்னிங்ஸ்களில் ஆடி 5 சதங்களை விளாசினார். ஆனால் அரையிறுதியில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். 

உலக கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் வைத்திருக்கும் ஒரு ரெக்கார்டை ரோஹித் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது முடியாமல் போனது. 2003 உலக கோப்பையில் சச்சின் அடித்த 673 ரன்கள்தான் ஒரு உலக கோப்பை தொடரில் ஒரு வீரர் குவித்த அதிகமான ரன்கள். அந்த சாதனையை முறியடிக்க நெருங்கிய ரோஹித்தும் வார்னரும் அந்த வாய்ப்பை தவறவிட்டனர்.

இந்த உலக கோப்பையில்(அரையிறுதி வரை) அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 649 ரன்களுடன் ரோஹித் முதலிடத்திலும் 648 ரன்களுடன் வார்னர் இரண்டாமிடத்திலும் உள்ளனர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளுமே அரையிறுதியுடன் வெளியேறிவிட்டதால் அவர்கள் இருவரும் சச்சின் சாதனையை முறியடிக்க வாய்ப்பில்லை. 

இறுதி போட்டியில் ஆடிவரும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து வீரர்களான ரூட் மற்றும் வில்லியம்சனுக்கு சச்சின் சாதனையை முறியடிக்க கடின வாய்ப்புள்ளது. ஆனால் அது ரொம்ப கஷ்டம். இறுதி போட்டிக்கு முன்புவரை ரூட் 549 ரன்களும் வில்லியம்சன் 548 ரன்களும் குவித்துள்ளனர். லார்ட்ஸில் நடந்துவரும் இறுதி போட்டியில் ரூட் 125 ரன்களோ அல்லது வில்லியம்சன் 126 ரன்களோ அடித்தால் சச்சின் சாதனை முறியடிக்கப்படும். ஆனால் ரூட்டோ வில்லியம்சனோ அந்தளவிற்கு பெரிய இன்னிங்ஸ் ஆடுகிறார்களா என்று பார்ப்போம்.