நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் ஆடுகின்றன. 

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பந்துவீசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் இலங்கை ஸ்பின்னர் அகிலா தனஞ்செயா ஆகிய இருவரின் பவுலிங் ஆக்‌ஷனும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

வில்லியம்சன் எப்போதாவதுதான் பந்துவீசுவார். அந்தவகையில், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 3 ஓவர்கள் வீசினார். அகிலா தனஞ்செயா இலங்கை அணியின் பிரைம் ஸ்பின்னர். இவர்கள் இருவரின் பவுலிங் ஆக்‌ஷன், முறையாக இல்லாமல் சந்தேகத்திற்குரிய வகையில் இருப்பதாக கடந்த 18ம் தேதி ஐசிசியிடம் போட்டியை நடத்தும் அதிகாரிகள் புகாரளித்துள்ளனர். இந்த தகவலை ஐசிசி உறுதிப்படுத்தியுள்ளது. 

புகார் கிடைத்த தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் வில்லியம்சன் மற்றும் தனஞ்செயாவின் பவுலிங் ஆக்‌ஷன் பரிசோதிக்கப்படும். அந்த சோதனையின் முடிவு வரும்வரை, இவர்கள் இருவரும் பந்துவீசுவதற்கு தடையில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டி 22ம் தேதி தொடங்குவதால், தனஞ்செயா பந்துவீசுவதில் எந்த சிக்கலும் இல்லை.