சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரராக திகழும் விராட் கோலி, களத்தில் ஆக்ரோஷமானவர். தனக்கும் தன் அணிக்கும் எதிராக எதிரணி வீரர்கள் பயன்படுத்திய கொண்டாட்ட உத்தியை, சரியான தருணத்தில் அதே மாதிரி அவர்களுக்கு திருப்பி கொடுக்கக்கூடியவர். அதனால் எதிரணி வீரர்களின் செயல்பாடுகளை மறக்கவே மாட்டார். 

இதை கடந்த காலங்களில் பலமுறை பார்த்திருக்கக்கூடும். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் போட்டியில் கூட, 2017ல் தன்னை அவுட்டாக்கி வழியனுப்பிவைத்த வில்லியம்ஸின் அதே நோட்புக் ஸ்டைலில் அவருக்கு பதிலடி கொடுத்தார் விராட் கோலி. 

விராட் கோலியிடம் எந்த வித மோதல் போக்கையும் கடைபிடிக்க வேண்டாம், அவரை சீண்ட வேண்டாம் என்பதே முன்னாள் ஜாம்பவான்கள் அவரவர் அணிக்கு சொல்லும் அறிவுரை. ஆனாலும் சில வீரர்கள், கோலியை சீண்டி வாங்கிக்கட்டி கொள்கின்றனர். 

முதல் போட்டியில் பட்டது போதாதென்று, இரண்டாவது போட்டியில் கோலியை வீழ்த்திய வில்லியம்ஸ், தனது அடையாளமான நோட்புக் கொண்டாட்டத்தை கைவிட்டு, வாயில் கை வைத்து, அவர் அணி வீரர்களிடம், கோலியின் விக்கெட்டை கொண்டாட வேண்டாம் என்கிற ரீதியில் கோலியை வழியனுப்பிவைத்தார். அந்த வீடியோ வைரலாகிவருகிறது. 

வில்லியம்ஸ் அடங்கவே மாட்டார் போல.. அடுத்த போட்டியில் கண்டிப்பாக விராட் கோலி பதிலடி கொடுத்துவிடுவார் என்று நம்புவோம். அப்படி அடுத்த போட்டியில் கொடுக்க முடியாமல் போனாலும், அடுத்ததாக ஒருநாள் தொடரிலோ எதிர்காலத்திலோ இதற்கான பதிலடி கண்டிப்பாக காத்திருக்கிறது.