உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மான்செஸ்டரில் நேற்று நடந்தது. மழையால் அந்த ஆட்டம் பாதிக்கப்பட்டதால் இன்று தொடர்கிறது. 

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் போட்டி தடைபட்டது. அதன்பின்னர் மழை நிற்காததால் போட்டி நீண்ட நேரம் தடைபட்டிருந்தது. மழை ஒருமுறை நின்றதும் போட்டி தொடங்கப்பட வாய்ப்பிருந்த நிலையில், மீண்டும் மழை பெய்ததால் நேற்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டு ரிசர்வ் நாளான இன்று தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. 

அரையிறுதி, இறுதி போட்டிகளில் நாள் முழுக்க மழை பெய்தால் என்ன ஆகும்..? முழு விவரம் உள்ளே

இதையடுத்து இன்று பிற்பகல் வழக்கம்போல 3 மணிக்கு போட்டி தொடரும். நியூசிலாந்து அணி எஞ்சிய 23 பந்துகள் பேட்டிங் ஆடும். அதன்பின்னர் இந்திய அணி இலக்கை விரட்டும். இன்று ஆட்டத்தின் பாதியில் மழை வந்தால், இந்திய அணி இலக்கை விரட்டும்போது குறைந்தது 20 ஓவர்கள் பேட்டிங் ஆடியபிறகு மழையால் ஆட்டம் தடைபட்டால் டி.எல்.எஸ் முறைப்படி அப்போதைய சூழலில் இந்திய அணி அடித்த ஸ்கோரை வைத்து முடிவு செய்யப்படும்.

ஒருவேளை இந்திய அணி 20 ஓவருக்கு குறைவாக ஆடியநிலையில் மழை வந்து ஆட்டம் தடைபட்டாலோ அல்லது இன்று முழுவதும் மழை வந்தாலோ, லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் இந்திய அணி முன்னிலை பெற்றிருப்பதால் இந்திய அணியே இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.