இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது. சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. எனவே 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. எனவே இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

முதல் போட்டியில் கேப்டன் ஜோ ரூட் மற்றும் சீனியர் நட்சத்திர பவுலர் ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவரும் ஆடவில்லை. இந்நிலையில், அவர்கள் இருவரும் இந்த போட்டியில் மீண்டும் களமிறங்கியுள்ளனர்.

இங்கிலாந்து அணியில் ரூட்டும் பிராடும் இணைவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மேலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேப்டன் ஜோ ரூட் அணியில் இணைந்ததால் ஜோ டென்லி நீக்கப்பட்டார். ஜோஃப்ரா ஆர்ச்சர் கொரோனா விதிமுறைகளை மீறியதால் அவர் இந்த போட்டியிலிருந்து நீக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே அவருக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் அணியில் இணைந்துள்ளார். மற்றொரு ஃபாஸ்ட் பவுலரான மார்க் உட் நீக்கப்பட்டு ஆல்ரவுண்டர் சாம் கரன் எடுக்கப்பட்டுள்ளார். சீனியர் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஸ்டூவர்ட் பிராட் அணியில் இணைந்த நிலையில், அதிர்ச்சிகரமாக மற்றொரு சீனியர் பவுலரான ஆண்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். 

தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய இந்த போட்டியில் ஆண்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். 4 மாத இடைவெளிக்கு பிறகு ஆடுவதால், முதல் போட்டியில் ஆடிய ஆண்டர்சனை, தொடர்ச்சியாக ஆடவைத்து பணிச்சுமையை அதிகரிக்கக்கூடாது என்பதற்காக, அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் இருக்கின்றனர். 

இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, ஜாக் க்ராவ்லி, ஜோ ரூட்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஓலி போப், ஜோஸ் பட்லர், டோமினிக் பெஸ், கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், ஸ்டூவர்ட் பிராட்.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

ஜான் கேம்ப்பெல், கிரைக் பிராத்வெயிட், ஷேய் ஹோப், ப்ரூக்ஸ், ரோஸ்டான் சேஸ், பிளாக்வுட், ஜேசன் ஹோல்டர்(கேப்டன்), ஷேன் டௌரிச், அல்ஸாரி ஜோசஃப், கீமார் ரோச், ஷெனான் கேப்ரியல்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் போட்டியில் ஆடிய அதே அணியுடன் தான் வெஸ்ட் இண்டீஸ் இறங்கியுள்ளது.