இந்தியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 3-0 என ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது இந்திய அணி. 

அதைத்தொடர்ந்து நடந்துவரும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என டி20 தொடரை வென்றுவிட்ட நிலையில் 3வது டி20 போட்டி இன்று நடக்கிறது.

இந்திய அணி தொடரை ஏற்கனவே வென்றுவிட்டதால், அணி காம்பினேஷனில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் பபுளில் இருந்து வெளியேறி சென்றுவிட்டனர். எனவே அவர்கள் இருவரும் இந்த போட்டியில் ஆடவில்லை. அவர்களுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அணியில் இணைந்துள்ளனர்.

மேலும் ஸ்பின்னர் சாஹல் மற்றும் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஷர்துல் தாகூர் மற்றும் ஆவேஷ் கான் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆவேஷ் கானுக்கு இதுதான் முதல் சர்வதேச டி20 போட்டி. இந்த போட்டியில் இந்திய அணியில் அறிமுகமாகிறார் ஆவேஷ் கான்.

ருதுராஜ் கெய்க்வாட் இந்த போட்டியில் ஆடுவதால், இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள் என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இளம் வீரர்களுக்கு அவர்களது திறமையை நிரூபிக்க ஏதுவாக அவர்கள் இருவரையும் ஓபனிங்கில் இறக்கிவிட்டுள்ளார் ரோஹித் சர்மா.

இந்திய அணி:

ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய்.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கைல் மேயர்ஸ், ஷேய் ஹோப், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், கைரன் பொல்லார்டு (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், ரோஸ்டான் சேஸ், ரொமாரியோ ஷெஃபெர்டு, டோமினிக் ட்ரேக்ஸ், ஃபேபியன் ஆலன், ஹைடன் வால்ஷ்.