பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.
பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் தொடரின் முதல் போட்டி கடந்த 12ம் தேதி தொடங்கி நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள் அடித்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஆலம் 56 ரன்கள் அடித்தார். ஃபஹீம் அஷ்ரஃப் 44 ரன்களும், கேப்டன் பாபர் அசாம் 30 ரன்களும் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 253 ரன்கள் அடித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான க்ரைக் பிராத்வெயிட் அபாரமாக ஆடி 97 ரன்களை குவித்தார். 3 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.
36 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி, வெறும் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபாரமாக பந்துவீசிய ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பாகிஸ்தான் அணி 167 ரன்கள் முன்னிலை பெற, 168 ரன்கள் என்ற இலக்கை 2வது இன்னிங்ஸில் விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிளாக்வுட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜேசன் ஹோல்டரும் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். டாப் ஆர்டர் வீரர்கள் யாருமே சரியாக ஆடவில்லை.
இதையடுத்து 142 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ், 151 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. சிறப்பாக ஆடி வெஸ்ட் இண்டீஸுக்கு நம்பிக்கையளித்த கீமார் ரோச் கடைசி வரை களத்தில் நின்று பொறுப்பை செவ்வனே செய்தார். பாகிஸ்தான் அணிக்கு ஒரேயொரு விக்கெட் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது.
கீமார் ரோச்சுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, மிகக்கவனமாக தனது விக்கெட்டை இழந்துவிடாமல் ஆடினார் 11வது வரிசையில் இறங்கிய ஜெய்டன் சீல்ஸ். அவர் 13 பந்துகளை எதிர்கொண்டு 2 ரன் அடித்தார். ரோச் 30 ரன்கள் அடித்து வெஸ்ட் இண்டீஸை த்ரில் வெற்றி பெற செய்தார். ஒரேயொரு விக்கெட்டை வைத்துக்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் இலக்கை விரட்டியதும், ஒரு விக்கெட்டுக்கு பாகிஸ்தான் போராடியதும் என போட்டி பரபரப்பாக இருந்தது. ஆனால் இந்த போட்டியில் பாகிஸ்தானை கடைசியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்.
