இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, ஹோல்டர் மற்றும் கேப்ரியலின் வேகத்தில் 204 ரன்களுக்கே சுருண்டது. இங்கிலாந்து அணியின் சார்பில், அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களையும் பட்லர் 35 ரன்களையும் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 6 விக்கெட்டுகளையும் கேப்ரியல் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் கிரைக் பிராத்வெயிட் மற்றும் டௌரிச் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் அடித்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் டோமினிக் பெஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

முதல் இன்னிங்ஸ் முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தை விட 114 ரன்கள் முன்னிலை பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்ற போட்டிகளில் பெரும்பாலான போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் தான் வெற்றி பெற்றிருக்கிறது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்ற 165 போட்டிகளில் 102ல் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. வெறும் 3ல் மட்டுமே தோற்றுள்ளது. 59 போட்டிகள் டிரா ஆகியுள்ளன. 

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 114 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. எனவே வெஸ்ட் இண்டீஸ் பழைய ரெக்கார்டின் படி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறுமா அல்லது இங்கிலாந்து விதிவிலக்காகுமா என்பதை பார்ப்போம்.

114 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி சுதாரித்துக்கொண்டது. முதல் இன்னினிங்ஸை போல விக்கெட்டுகளை எளிதாக இழக்காமல், சிறப்பாக ஆடிவருகிறது. எனவே போட்டி முடிவில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.