டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு வாழ்வா சாவா போட்டியில் 20 ஓவரில் 157 ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 158 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது.
டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. க்ரூப் 1-ல் இங்கிலாந்து அணியும், க்ரூப் 2-ல் பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன.
க்ரூப் 1-லிருந்து அரையிறுதிக்கு 2வது அணியாக முன்னேற, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. க்ரூப் 2-ல் நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய 3 அணிகளுக்குமே வாய்ப்புள்ளது.
க்ரூப் 1-ல் தலா 5 போட்டிகளில் ஆடியுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுமே தலா 6 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், இன்று அந்த 2 அணிகளுமே அவற்றின் கடைசி போட்டியில் ஆடுகின்றன. கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸையும், தென்னாப்பிரிக்கா இங்கிலாந்தையும் எதிர்கொள்கின்றன. இந்த 2 போட்டிகளுமே இன்றுதான் நடக்கின்றன. அரையிறுதிக்கு முன்னேற, ஆஸி., மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 2 அணிகளும் இன்று வெற்றி பெற வேண்டும். ஒருவேளை 2 அணிகளும் வெற்றி பெற்றால், நெட் ரன்ரேட்டின் அடிப்படையில், அதிக ரன்ரேட்டை பெற்ற அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
எனவே வெற்றி கட்டாயத்துடன் வாழ்வா சாவா போட்டியில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்டு ஆடிவருகிறது ஆஸ்திரேலிய அணி. ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான போட்டி அபுதாபியில் நடந்துவருகிறது. வெற்றி கட்டாயத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணி:
டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
வெஸ்ட் இண்டீஸ் அணி:
கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரோஸ்டான் சேஸ், ஷிம்ரான் ஹெட்மயர், கைரன் பொல்லார்டு (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ஜேசன் ஹோல்டர், ட்வைன் பிராவோ, ஹைடன் வால்ஷ், அகீல் ஹுசைன்.
முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல், 15 ரன்னில் பாட் கம்மின்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பூரன்(4), ரோஸ்டான் சேஸ்(0) ஆகிய இருவரும் ஹேசில்வுட்டின் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர்.
நம்பிக்கையளித்த ஹெட்மயரும் 27 ரன்னில் ஹேசில்வுட்டின் பந்தில் ஆட்டமிழக்க, சர்வதேச கிரிக்கெட்டில் தனது கடைசி இன்னிங்ஸை இன்று ஆடிய பிராவோ 10 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் சவாலான இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயிக்க வேண்டும் என்பதற்காக பொறுப்புடன் அடித்து ஆடிய கேப்டன் பொல்லார்டு, 31 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரின் 2வது பந்தில் பொல்லார்டு ஆட்டமிழக்க, மிட்செல் ஸ்டார்க் வீசிய அந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெறும் 2 ரன்கள் மட்டுமே கிடைக்க, கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்களை விளாசி தனது ஸ்டைலில் முடித்து கொடுத்தார் ஆண்ட்ரே ரசல். இதையடுத்து 20 ஓவரில் 157 ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 158 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆஸி.,க்கு நிர்ணயித்தது. இந்த இலக்கை ஆஸி., அணி விரட்டிவருகிறது.
