ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஸ்மித்தின் அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்து மைதானத்தையே மிரளவிட்டார் கேட்ரெல்.

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நாட்டிங்காமில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. எனினும் ஸ்மித் - அலெக்ஸ் கேரியின் பொறுப்பான பேட்டிங் மற்றும் கடைசி நேர குல்டர்நைலின் அதிரடி ஆகியவற்றின் விளைவாக 288 ரன்களை குவித்தது. 

289 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹோப், பூரான், கேப்டன் ஹோல்டர் ஆகியோர் சிறப்பாக ஆடியபோதும், ஒரு நிலையான பார்ட்னர்ஷிப் அமையாததால் கடைசியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இந்த போட்டியில் 38 ரன்களுக்கே 4 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணியை ஸ்மித் தான் அலெக்ஸ் கேரியுடன் இணைந்து மீட்டெடுத்தார். கேரியின் விக்கெட்டுக்கு பின்னர் களத்திற்கு வந்த குல்டர்நைல் அதிரடியாக ஆடி ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மிடில் ஓவர்களில் ஸ்மித்தின் பொறுப்பான பேட்டிங் அந்த அணிக்கு பெரியளவில் உதவியது. 73 ரன்கள் குவித்த ஸ்மித்தை ஒஷேன் தாமஸ் வீழ்த்தினார். 

ஒஷேன் தாமஸ் வீசிய 45வது ஓவரின் இரண்டாவது பந்தை ஸ்கொயர் லெக் திசையில் ஃப்ளிக் ஷாட் அடித்தார். அங்கு ஃபீல்டிங்கில் இருந்த கோட்ரெல், வேகமாக ஓடி ஒற்றை கையில் அதை அபாரமாக கேட்ச் செய்தார். ஆனால் பேலன்ஸ் மிஸ்ஸாகி பவுண்டரி லைனுக்குள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், அதற்குள்ளாக பந்தை மேலே தூக்கி போட்டு, பின்னர் மீண்டும் பவுண்டரி லைனிலிருந்து வெளியே வந்து மீண்டும் பிடித்தார். செம டைமிங்கில் அபாரமாக அந்த கேட்ச்சை பிடித்தார் கோட்ரெல். இந்த உலக கோப்பை தொடரின் அபாரமான கேட்ச்களில் இதுவும் ஒன்று.