இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

காம்ப்பெல், க்ரைக் பிராத்வெயிட், ப்ரூக்ஸ், டேரன் பிராவோ ஆகியோர் கிடைத்த ஸ்டார்ட்டை பெரிதாக கன்வெர்ட் செய்யவில்லை. இவர்கள் எல்லாருமே குறைந்தது 5 ஓவருக்கு மேல் பேட்டிங் ஆடியும், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. 

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. ரோஸ்டன் சேஸ் தான் அதிகபட்சமாக 48 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் படுமோசமாக அமைந்திருந்தது. அவசரப்பட்டு அனைவரும் விக்கெட்டுகளை இழந்தனர். 222 ரன்களுக்கே வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட்டான நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான கோலியும் ரஹானேவும் அபாரமாக ஆடிவருகின்றனர். அதனால் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, மொத்தமாக 260 ரன்கள் முன்னிலை முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. 

இந்திய அணி இன்னும் 100-150 ரன்கள் அடித்தாலே போதும், வெற்றி உறுதிதான். ஏனெனில் கடைசி இன்னிங்ஸில் 350-400 ரன்கள் என்ற இலக்கை விரட்டுவது எளிதான காரியம் அல்ல. 

இந்நிலையில், இந்த போட்டி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர், எங்கள் பேட்டிங் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. மிடில் ஆர்டர், லோயர் ஆர்டரும் பரவாயில்லை. டாப் ஆர்டர் கண்டிப்பாக நன்றாக ஆட வேண்டும். பவுலர்கள் அபாரமாக செயல்படுகிறார்கள். பேட்டிங் தான் மேம்பட வேண்டும் என்று ஹோல்டர் தெரிவித்தார்.