ஆஃப்கானிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை 3-0 என வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது.

தற்போது டி20 தொடர் நடந்துவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவரில் 164 ரன்கள் அடித்தது.

தொடக்க வீரர் பிரண்டன் கிங் வெறும் 4 ரன்களில் அவுட்டானார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான லெவிஸ் 41 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 68 ரன்களை குவித்தார். ஹெட்மயர் மந்தமாக பேட்டிங் ஆடி 21 பந்தில் 21 ரன் மட்டுமே அடித்தார். ராம்தினும் சொதப்பினார். கேப்டன் பொல்லார்டு அதிரடியாக ஆடி 22 பந்தில் 32 ரன் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவரில் 164 ரன்கள் அடித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

165 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஹஸ்ரதுல்லா சேசாய் 23 ரன்களும் அஸ்கர் ஆஃப்கான் 25 ரன்களும் நஜிபுல்லா ஜட்ரான் 27 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர்.

இவர்கள் மூவருமே கிடைத்த ஸ்டார்ட்டை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆட தவறிவிட்டனர். இவர்கள் மூவரில் ஒருவர் பெரிய இன்னிங்ஸ் ஆடியிருந்தால் கூட ஆஃப்கானிஸ்தான் ஜெயித்திருக்கலாம். ஆனால் மூவருமே இருபதுகளில் ஆட்டமிழந்துவிட்டனர். இவர்கள் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் சரியாக ஆடவில்லை. ஒற்றை இலக்கங்களில் வெளியேறினர். 9ம் வரிசையில் பேட்டிங் ஆடவந்த ஃபரீத் மாலிக் 15 பந்தில் 24 ரன்கள் அடித்தார்.

20 ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணி, 134 ரன்கள் மட்டுமே அடித்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பேட்டிங்கில் நன்றாக செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டு, பவுலிங்கும் நன்றாக வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதன்மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை வகிக்கிறது.