இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி சவுத்தாம்ப்டனில் கடந்த 8ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், பட்லர், ரோரி பர்ன்ஸ், ஜோ டென்லி ஆகியோருக்கு நல்ல ஸ்டார்ட் கிடைத்தது. ஆனால் அதை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆட அனைவருமே தவறிவிட்டனர். இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களையும் அதற்கடுத்தபடியாக பட்லர் 35 ரன்களையும் அடித்தனர். டோமினிக் பெஸ் 31 ரன்கள் அடித்து கடைசிவரை அவுட்டாகவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கேப்டன் ஜேசன் ஹோல்டரும் ஷெனான் கேப்ரியலும் அருமையாக பந்துவீசினர். ஹோல்டர் 6 விக்கெட்டுகளையும் கேப்ரியல் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, இங்கிலாந்தை 204 ரன்களுக்கு சுருட்டினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்து அடித்த ஸ்கோரை முந்திவிட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிரைக் பிராத்வெயிட்டும் ஜான் கேம்ப்பெல்லும் இறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 43 ரன்கள் அடித்தனர். கேம்ப்பெல் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை ஆண்டர்சன் வீழ்த்தினார். ஷேய் ஹோப் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய கிரைக் பிராத்வெயிட் அரைசதம் அடித்தார். அவருடன் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ப்ரூக்ஸும் சிறப்பாக ஆடினார். 

அரைசதம் அடித்த கிரைக் பிராத்வெயிட் 65 ரன்களில் பென் ஸ்டோக்ஸின் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதையடுத்து, சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ப்ரூக்ஸை 39 ரன்களில் ஆண்டர்சன் வீழ்த்தினார். அதன்பின்னர் பிளாக்வுட் 12 ரன்களில் அவுட்டானார். ரோஸ்டான் சேஸும் ஷேன் டௌரிச்சும் இணைந்து ஆடிவருகின்றனர். 

வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் அடித்த ஸ்கோரை முந்திவிட்டது. 5 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களுக்கு மேல் அடித்து ஆடிவருகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. அந்த அணியிடம் இன்னும் 5 விக்கெட்டுகள் எஞ்சியுள்ள நிலையில், அந்த அணி 300 ரன்களுக்கு மேல் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.