வாசிம் அக்ரம் - வக்கார் யூனிஸ் ஃபாஸ்ட் பவுலிங் ஜோடி, எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஜோடி. அதிலும் வாசிம் அக்ரமின் இடது கை ஃபாஸ்ட் பவுலிங்கில் சிக்கி சின்னாபின்னமான பேட்ஸ்மேன்கள் பலர். 1984ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியில் ஆடிய வாசிம் அக்ரம், கேப்டனாகவும் இருந்துள்ளார். 

அவரது கெரியரில் விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ராகுல் டிராவிட், ஜாக் காலிஸ், ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹைடன் போன்ற பல்வேறு சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசியுள்ளார் வாசிம் அக்ரம். இவர்களில் சச்சினும் லாராவும்தான் டாப் பேட்ஸ்மேன்களாக இன்றளவும் அறியப்படுபவர்கள். மற்றவர்களும் சிறந்த பேட்ஸ்மேன்களாக இருந்தாலும் கூட, சச்சினும் லாராவும் அவர்களை விட ஒரு படி மேலே பார்க்கப்படுகிறார்கள்.

இந்நிலையில், வாசிம் அக்ரம் தனது கெரியரில் தான் பந்துவீசியதிலேயே எந்த பேட்ஸ்மேன் மிகவும் சவாலானவர் என்றும், யாருக்கு வீசுவது மிகவும் கடினம் என்றும் தெரிவித்துள்ளார். அந்தவகையில், சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா ஆகியோரின் பெயரைக்கூட வாசிம் அக்ரம் தெரிவிக்கவில்லை. அந்தளவிற்கு வாசிம் அக்ரமுக்கே அச்சுறுத்தலாக இருந்த பேட்ஸ்மேன், நியூசிலாந்தின் மார்டின் க்ரோவ் தான்.

இதை வாசிம் அக்ரமே தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள வாசிம் அக்ரம், மார்டின் க்ரோவ் தான் பந்துவீசுவதற்கு மிகவும் கடினமான பேட்ஸ்மேன். ஏனென்றால், அவர் எங்களுக்கு எதிராக அதிகமான ரன்களை குவித்துள்ளார். அவர் எப்போதுமே ஃப்ரண்ட் ஃபூட்டில் தான் ஆடுவார். அதனால் விரக்தியடைந்த என்னை போன்ற ஃபாஸ்ட் பவுலர்கள் ஷார்ட் லெந்த்தில் பந்தை வீசுவோம். அதுதான் அவருக்கு தேவையானதும் கூட என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். 

1992 உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தும் பாகிஸ்தானும் தான் மோதின. அந்த போட்டியில் மார்டின் க்ரோவ் அபாரமாக பேட்டிங் ஆடி, 83 பந்தில் 91 ரன்களை குவித்தார். ஆனால் அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி, கோப்பையையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியை மனதில் வைத்துத்தான் அக்ரம் இப்படி கூறியிருக்கக்கூடும்.