இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

முதல் போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தும் அதை பாகிஸ்தான் அணி தவறவிட்டது. பாகிஸ்தான் அணி வெற்றி வாய்ப்பை தவறவிட்டது குறித்து வாசிம் அக்ரம், அக்தர், அஃப்ரிடி, முகமது யூசுஃப் ஆகிய முன்னாள் வீரர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், இரண்டாவது போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் ஒரு மாற்றத்தை கண்டிப்பாக செய்தாக வேண்டும் என்று வாசிம் அக்ரம் வலியுறுத்தியுள்ளார்.  அடுத்த போட்டி நடக்கும் சவுத்தாம்ப்டன் ஆடுகளத்தில் பந்து பெரியளவில் திரும்பாது என்பதால், 2 ஸ்பின்னர்களில் ஒருவரை நீக்கிவிட்டு ஃபவாத் ஆலமை மிடில் ஆர்டரில் பேட்டிங் ஆடவைக்கலாம் என்று வாசிம் அக்ரம் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள வாசிம் அக்ரம், அடுத்த போட்டி நடக்கும் ஆடுகளத்தில் பந்து டர்ன் ஆகாது. அதனால் ஒரு ஸ்பின்னரை நீக்கிவிட்டு கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை எடுக்கலாம். ஃபவாத் ஆலமை அணியில் எடுத்து மிடில் ஆர்டரில் அவரை இறக்கலாம். அவர் இடது கை பேட்ஸ்மேன் என்பதால், இடது - வலது பேட்டிங் காம்பினேஷன் கிடைக்கும். முதல் தர கிரிக்கெட்டில் அவரது சராசரி 56. அறிமுக போட்டியிலேயே சதமடித்தவர் ஃபவாத் ஆலம். அதனால் அவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று வாசிம் அக்ரம் வலியுறுத்தியுள்ளார். 

2009ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அறிமுகமான ஃபவாத் ஆலம், அறிமுக போட்டியிலேயே சதமடித்தார். அதன்பின்னர் அதே ஆண்டில் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிய ஃபவாத் ஆலம், அதன்பின்னர் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் எடுக்கப்படவேயில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் ஃபவாத் ஆலமும் இருக்கிறார். எனவே அவரை ஆடும் லெவனில் எடுக்க வேண்டும் என்று வாசிம் அக்ரம் வலியுறுத்தியுள்ளார். அடுத்த போட்டி நடக்கும் சவுத்தாம்ப்டன் ஆடுகளத்தில் பந்து டர்ன் ஆகாது என்பதால் ஷதாப் கான் - யாசிர் ஷா ஆகிய 2 ஸ்பின்னர்களில் ஒருவரை நீக்கிவிட்டு ஃபவாத் ஆலமை எடுக்கலாம் என்பது வாசிம் அக்ரமின் கருத்து.