டேவிட் வார்னர் மிகச்சிறந்த அதிரடி வீரர். அதிரடியாக ஆடி எதிரணிகளை கதிகலங்கவைத்து மிகப்பெரிய ஸ்கோர் செய்யக்கூடியவர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையை அனுபவித்து, தடை முடிந்து மீண்டும் அணிக்கு திரும்பிய வார்னர், உலக கோப்பையில் மிகச்சிறப்பாக ஆடி செம கம்பேக் கொடுத்தார். உலக கோப்பையில் 10 இன்னிங்ஸில் 647 ரன்களை குவித்தார். 

அதன்பின்னர் ஆஷஸ் தொடரில் படுமோசமாக சொதப்பினார். ஆஷஸ் தொடரின் 5 போட்டியில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. உலக கோப்பையில் நல்ல ஃபார்மில் ஆடிய வார்னர், ஆஷஸ் தொடரில் ஆடவில்லை என்றதும், அவர் ஒருநாள் மற்றும் டி20 வீரர் மட்டுமே; டெஸ்ட் போட்டிக்கான வீரர் இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. ஆனால் அணி நிர்வாகமும், தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரும் வார்னர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். 

அந்த நம்பிக்கைக்கு உகந்த வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக அபாரமாக ஆடினார். முதல் போட்டியில் 154 ரன்களை அடித்த வார்னர், இரண்டாவது போட்டியில் முச்சதம் விளாசினார். 335 ரன்களை குவித்தார் வார்னர். 400 ரன்களை நோக்கி அவர் ஆடிக்கொண்டிருந்த நிலையில், அணியின் நலன் கருதி இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்பட்டதால் 335 நாட் அவுட்டாக பெவிலியனுக்கு சென்றார். அந்த இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்படாவிட்டால், பிரயன் லாராவின் 400 ரன்கள் ரெக்கார்டை வார்னர் முறியடித்திருப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருந்தன. ஏனெனில், அவர் ஆடிய விதம் அப்படி. 

இந்நிலையில், இரண்டாவதெ டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய விருதுகளை வென்ற வார்னர், தன்னிடம் இருந்த டெஸ்ட் பேட்ஸ்மேனை கண்டறிந்து தனக்கு நம்பிக்கையூட்டியது சேவாக் தான் என்று தெரிவித்தார். 

இதுகுறித்து பேசிய டேவிட் வார்னர், ஐபிஎல்லில் டெல்லி அணிக்காக ஆடியபோதுதான் சேவாக்கை பார்த்தேன். அப்போது அவர் என்னிடம் வந்து, நீ நல்ல டி20 பேட்ஸ்மேன் தான். ஆனால் அதைவிட நல்ல டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று கூறினார். நான் அதிகமான முதல் தர போட்டிகளில் ஆடியதையே இல்லையே.. என்னை பார்த்து இப்படி சொல்கிறீர்களே என்று சேவாக்கிடம் சொன்னேன். 

அதற்கு அவர், டெஸ்ட் போட்டிகளில் ஸ்லிப் மற்றும் கல்லியில் தான் ஃபீல்டர்கல் நிற்பார்கள். எனவே கவர் திசையும் மிட் விக்கெட் திசையும் காற்று வாங்கும். எனவே நீ அந்த திசைகளில் பந்தை தூக்கியடித்தால் போதும். நீ ஒரு நல்ல டெஸ்ட் பேட்ஸ்மேனாக திகழமுடியும் என்று கூறினார். சேவாக்கின் அந்த அறிவுரை என் மனதில் ஆழப்பதிந்தது. அது அவ்வப்போது எனக்கு நினைவில் வந்துகொண்டே இருக்கும் என்று வார்னர் தெரிவித்தார். 

வார்னரை அனைவரும் டி20 பேட்ஸ்மேனாக மட்டுமே பார்த்த காலத்தில் சேவாக் தான், அவரின் திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்தியுள்ளார்.