உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. 

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பைக்கு முன்புவரை பெரியளவில் ஆடவில்லை என்றாலும் உலக கோப்பை தொடரில் அபாரமாக ஆடிவருகிறது. இதுவரை 7 போட்டிகளில் ஆடி 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. 

வார்னர் மற்றும் ஸ்மித்தின் வருகை ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது. கேப்டன் ஃபின்ச்சின் அபார ஃபார்ம் அந்த அணியின் மிகப்பெரிய பலமாக உள்ளது. இந்த உலக கோப்பையில் இதுவரை அதிக ரன்கள் எடுத்த டாப் வீரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஃபின்ச்சும் வார்னரும் உள்ளனர். அந்தளவிற்கு இருவரின் பங்களிப்பும் சிறப்பாக உள்ளது. 

வார்னர் ரன்களை குவித்துவந்தாலும் இந்த உலக கோப்பை தொடரில் வார்னர் ஆடிவரும் ஆட்டம், அவரது இயல்பான ஆட்டம் கிடையாது. வழக்கமாக களமிறங்கியது முதலே அடித்து ஆடக்கூடிய வார்னர், இதுவரை ஆடிய அனைத்து போட்டிகளிலுமே நிதானமாகவே தொடங்கி ஸ்லோ இன்னிங்ஸே ஆடினார். இந்தியாவிடம் 84 பந்துகளை எதிர்கொண்டு 56 ரன்கள் மட்டுமே அடித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக கூட 111 பந்துகளில் 107 ரன்கள் அடித்தார். அதை பெரிய இன்னிங்ஸாகவும் மாற்றவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கூட 61 பந்துகளில் 53 ரன்கள் அடித்தார்.

வழக்கமாக அதிரடியாக ஆடியே அதிகமாக பார்க்கப்பட்ட வார்னரின் ஸ்லோ இன்னிங்ஸ்களை கண்ட பலர், அவரது ஸ்லோ இன்னிங்ஸை விமர்சித்தனர். ஆனால் வார்னர் ஆடுகளத்தின் தன்மையை கருத்தில் கொண்டும் நல்ல தொடக்கம் தேவை என்பதை உணர்ந்தும் சிறப்பாக ஆடுகிறார் என்று முன்னாள் கேப்டன் ஆலன் பார்டரும் இந்நாள் கேப்டன் ஃபின்ச்சும் வார்னருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். 

வார்னருக்கு ஆதரவாக அவர்கள் எல்லாம் குரல் கொடுத்த நிலையில், தனது நிதானமான பேட்டிங் குறித்து வார்னரே விளக்கமளித்துள்ளார். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். 

விக்கெட் இழப்பில்லாமல் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுப்பது மிக முக்கியம். அதுதான் எங்கள் அணியின் திட்டமும் கூட. தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழக்காமல் விக்கெட்டை கையில் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆடுகளத்தின் தன்மையையும் கருத்தில்கொண்டு ஆட வேண்டும். விக்கெட்டை விரைவில் இழந்துவிடாமல் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என்றால் நிதானமாகத்தான் ஆடவேண்டும். இங்கிலாந்து பவுலர்கள் வோக்ஸ், ஆர்ச்சர் இருவருமே சவாலான பவுலர்கள். எனவே அவர்களை திறம்பட கையாள வேண்டும். ஆடுகளத்தில் பந்து நின்று வந்ததால் அவசரப்படாமல் ஆட வேண்டியது அவசியம் என்று வார்னர் தெரிவித்தார்.

 

இந்த காரணங்களை எல்லாம் கருத்தில்கொண்டுதான் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆடாமல் பொறுப்புடன் ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்துவருகிறார் வார்னர்.