உலக கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் அபாரமாக ஆடி சதம் விளாசியுள்ளார்.

நாட்டிங்காமில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து வார்னரும் ஃபின்ச்சும் களமிறங்கினர். 

வார்னர் - ஃபின்ச் இருவருமே நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில், வங்கதேச அணிக்கு எதிராக இருவருமே சிறப்பாக ஆடினர். வங்கதேச அணியின் பவுலிங்கை ஆரம்பத்தில் சற்று நிதானமாக ஆடிய வார்னரும் ஃபின்ச்சும் பின்னர் தங்களது வேலையை காட்ட ஆரம்பித்தனர். முதல் சில ஓவர்கள் பொறுமையாக ஆடினர். களத்தில் நிலைத்துவிட்டதும் அதிரடியை தொடங்கினர். 

வார்னர் அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து ஃபின்ச்சும் அரைசதம் அடித்தார். ஆனால் ஃபின்ச் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் வெறும் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வார்னருடன் உஸ்மான் கவாஜா ஜோடி சேர்ந்தார். வார்னர் சிறப்பாக ஆட, உஸ்மானும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிவருகிறார். 

தொடர்ந்து சிறப்பாக ஆடிய வார்னர், சதமடித்து அசத்தினார். அவர் தொடர்ந்து ஆடிவருவதால் ஆஸ்திரேலிய அணி நல்ல ஸ்கோரை எட்டுவது உறுதி. வார்னர் ஒருமுனையில் சிறப்பாக ஆட, மறுமுனையில் சைலண்ட்டாக தன் பணியை சிறப்பாக செய்துவரும் உஸ்மான் அரைசதத்தை நெருங்கிவிட்டார்.