வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், அபாரமாக ஆடி 166 ரன்களை குவித்தார். உஸ்மான் கவாஜாவும் சிறப்பாக ஆடி 89 ரன்களை குவித்தார். இவர்களின் சிறப்பான பேட்டிங் மற்றும் மேக்ஸ்வெல்லின் தாறுமாறான அதிரடியால் 381 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, 333 ரன்களுக்கு வங்கதேச அணியை சுருட்டி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் அபாரமாக ஆடிய வார்னர் 166 ரன்களை குவித்தார். இதன்மூலம் பல மைல்கற்களை எட்டியுள்ளார் வார்னர். 

1. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமுறை 150 ரன்களுக்கு மேல் குவித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்த இடத்தில் வார்னர் உள்ளார். ரோஹித் 7 முறை 150 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். வார்னர் 6 முறை 150 ரன்களுக்கு மேல் குவித்து ரோஹித்துக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

2. வார்னர் நேற்று அடித்த 166 ரன்கள் தான் உலக கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் அடித்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். டாப் ஸ்கோருடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பதும் வார்னர் தான். 2015 உலக கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக வார்னர் அடித்த 178 ரன்கள் தான் டாப்.

3. இது வார்னரின் 16வது சதம். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் கில்கிறிஸ்ட்டை சமன் செய்துள்ளார். கில்கிறிஸ்ட்டும் 16 சதங்கள் அடித்துள்ளார். ரிக்கி பாண்டிங்(29 சதங்கள்), மார்க் வாக்(18 சதங்கள்) ஆகியோரு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை கில்கிறிஸ்ட்டுடன் பகிர்ந்துள்ளார் வார்னர்.