ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. 

டௌண்டனில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஃபின்ச்-வார்னர் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஃபின்ச் 82 ரன்களில் ஆட்டமிழக்க, அபாரமாக ஆடிய வார்னர் சதமடித்து அசத்தினார். எனினும் இவர்கள் அமைத்து கொடுத்த அடித்தளத்தை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக பயன்படுத்தவில்லை. அதனால் 50 ஓவர் முடிவில் 307 ரன்களை மட்டுமே எடுத்தது ஆஸ்திரேலிய அணி.

308 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணியை 266 ரன்களுக்கு சுருட்டி 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. சதமடித்த வார்னர் ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆட்டநாயகன் விருதை ஆஸ்திரேலிய அணியின் இளம் ரசிகரான ஒரு சிறுவனுக்கு வழங்கினார் டேவிட் வார்னர். வார்னரின் செயலால் அந்த சிறுவன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையை அனுபவித்து, ஓராண்டு தடை முடிந்து மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இணைந்து உலக கோப்பையில் ஆடிவரும் ஸ்மித் மற்றும் வார்னரை கிரிக்கெட் ரசிகர்கள் இன்னும் கிண்டலடித்து வருகின்றனர். எனினும் அதுபோன்ற விஷயங்களை எல்லாம் கடந்து, சிறப்பாக ஆடுவதில் மட்டுமே ஸ்மித் மற்றும் வார்னரின் கவனம் உள்ளது. தன் மீதான பழியை மறக்கடித்து தனது திறமையையும் பேட்டிங்கையும் மட்டுமே ரசிகர்களின் நினைவில் நிறுத்த வார்னர் உழைக்க வேண்டியிருக்கிறது. அந்த பணியை பேட்டிங்கின் மூலம் மட்டுமல்லாமல் இதுபோன்ற செயல்பாடுகளின் மூலமும் செய்ய முனைகிறார் வார்னர்.