உலக கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சதமடித்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர் பல சாதனைகளை படைத்தார். 

ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், அபாரமாக ஆடி 166 ரன்களை குவித்தார். உஸ்மான் கவாஜாவும் சிறப்பாக ஆடி 89 ரன்களை குவித்தார். இவர்களின் சிறப்பான பேட்டிங் மற்றும் மேக்ஸ்வெல்லின் தாறுமாறான அதிரடியால் 381 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, 333 ரன்களுக்கு வங்கதேச அணியை சுருட்டி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் அபாரமாக ஆடிய வார்னர் 166 ரன்களை குவித்தார். இதன்மூலம் பல மைல்கற்களை எட்டியுள்ளார் வார்னர். 

வார்னர் நேற்று அடித்த 166 ரன்கள் தான் உலக கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் அடித்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். டாப் ஸ்கோருடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பதும் வார்னர் தான். 2015 உலக கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக வார்னர் அடித்த 178 ரன்கள் தான் டாப்.

இது வார்னரின் 16வது சதம். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் கில்கிறிஸ்ட்டை சமன் செய்துள்ளார். கில்கிறிஸ்ட்டும் 16 சதங்கள் அடித்துள்ளார். ரிக்கி பாண்டிங்(29 சதங்கள்), மார்க் வாக்(18 சதங்கள்) ஆகியோரு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை கில்கிறிஸ்ட்டுடன் பகிர்ந்துள்ளார் வார்னர். 

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமுறை 150 ரன்களுக்கு மேல் குவித்த வீரர்கள் பட்டியலில் 6 முறை 150 ரன்களுக்கு மேல் குவித்துள்ள வார்னர் இரண்டாமிடத்தில் உள்ளார். 7 முறை 150 ரன்களுக்கு மேல் குவித்த ரோஹித் சர்மா தான் சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளார். இதில் மூன்று இரட்டை சதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.