கொரோனா உலகத்தையே அச்சுறுத்திவரும் நிலையில், இந்தியா உட்பட உலகளவில் பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அதனால் அனைத்து சமூக பொருளாதார நடவடிக்கைகளும் முடங்கியுள்ளன. கிரிக்கெட் போட்டிகள் உட்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏற்கனவே இன்று வரை ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைக்கு காலவரையின்றி ஐபிஎல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தது பிசிசிஐ. 

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த ஐபிஎல் தொடரை சர்வதேச அளவில் அனைத்து வீரர்களும் எதிர்நோக்கியிருந்தனர். இந்நிலையில், ஐபீஎல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஐபிஎல்லை டி20 உலக கோப்பைக்கு முன்பாக நடத்தினால், வீரர்களுக்கு உலக கோப்பைக்கான முன் தயாரிப்பாக இருக்கும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கருத்து தெரிவித்திருந்தார். அதே கருத்தை தற்போது விவிஎஸ் லட்சுமணனும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள லட்சுமணன், பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் ஐபிஎல் நடக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர். டி20 உலக கோப்பைக்கு முன் ஐபிஎல்லை நடத்தினால், உலக கோப்பைக்கான முன்னோட்டமாகவும் வீரர்களுக்கு சிறந்த முன் தயாரிப்பாகவும், உலக கோப்பைக்கான டோனை செட் செய்வதாகவும் அமையும். கொரோனாவிலிருந்து மீண்டு இயல்புநிலைக்கு திரும்பியதும், ஐபிஎல் கண்டிப்பாக நடத்தப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று லட்சுமணன் தெரிவித்துள்ளார்.