ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை கடந்த ஆண்டு வெல்ல முடியாமல் இழந்த இந்திய அணி, டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதற்காக தீவிரமாக தயாராகிவருகிறது. இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் என இரண்டுமே சிறப்பாக உள்ளது. பவுலிங்கிலும் கூட பேட்டிங் ஆட தெரிந்த பவுலர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பேட்டிங் டெப்த்தை அதிகரிக்கும் விதமாக பேட்டிங் ஆடத்தெரிந்த ஸ்பின்னர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 

தவானுக்கு பதில் இந்திய அணியில் இடம்பிடித்து, வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி அபாரமாக ஆடிய கேஎல் ராகுல், ரோஹித்துடன் உலக கோப்பையில் தொடக்க வீரராக இறக்கப்படுவதற்கான வாய்ப்பை கிட்டத்தட்ட பெற்றுவிட்டார். அதேபோல வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி ஆகியோரும் உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

டி20 உலக கோப்பைக்கு சரியான வீரர்களை தேர்வு செய்து பெஸ்ட் அணியுடன் ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்நிலையில், முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன், டி20 உலக கோப்பைக்கான அணியை தேர்வு செய்துள்ளார். 

விவிஎஸ் லட்சுமணன் தேர்வு செய்த டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ், மனீஷ் பாண்டே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார். 

தவான், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி ஆகிய வீரர்களை லட்சுமணன் தேர்வு செய்யவில்லை. ஆனால் தவான் அல்லது சஞ்சு சாம்சனில் ஒருவர் கண்டிப்பாக அணியில் இருப்பார். ராகுல் சமீப போட்டிகளில் அபாரமாக ஆடிவருவதால், அவரது ஃபார்மை பயன்படுத்தி கொள்ளவே அணி நிர்வாகமும் விரும்பும் என்பதால் உலக கோப்பையில் அவர் தான் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்குவார். ஆனால் மாற்று தொடக்க வீரருக்கான ஆப்சனே லட்சுமணன் தேர்வு செய்த அணியில் இல்லை. 

எனவே தவானோ அல்லது சஞ்சு சாம்சனோ உலக கோப்பைக்கான அணியில் கண்டிப்பாக இருப்பார். அதேபோல அசால்ட்டாக 140 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய நவ்தீப் சைனி, ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்கவிடுவார் என்பதால் அவரும் அணியில் கண்டிப்பாக இருப்பார். ஆனால் அவரையும் லட்சுமணன் தனது அணியில் தேர்வு செய்யவில்லை. இந்திய டி20 அணியில் தனது இடத்தை ஏற்கனவே உறுதி செய்துவிட்ட வாஷிங்டன் சுந்தரையும் லட்சுமணன் தேர்வு செய்யவில்லை. உலக கோப்பை அணியில் கண்டிப்பாக இடம்பெறும் வீரர்களையே விட்டுவிட்டு ஒரு அணியை தேர்வு செய்துள்ளார் லட்சுமணன்.