இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வெல்ல வேண்டுமென்றால், அணியின் சிறந்த ஆடும் லெவனை இறக்க வேண்டும் என்று விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார். 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் படுமோசமான பேட்டிங்கால் படுதோல்வி அடைந்தது. 

முதல் டி20 போட்டியில் ரோஹித் சர்மா ஆடாத நிலையில், ராகுலுடன் தவான் தொடக்க வீரராக இறங்கினார். ராகுல்(1), தவான்(4), கோலி(0) ஆகியோர் சொதப்ப, இந்திய அணி 124 ரன்கள் மட்டுமே அடித்து படுதோல்வி அடைந்தது. முதல் டி20 போட்டிக்கு முந்தைய நாள் தான், ரோஹித் மற்றும் ராகுல் தான் முதன்மை தொடக்க ஜோடி என்று தெரிவித்த கோலி, திடீரென போட்டியன்று ரோஹித்துக்கு ஓய்வு என்று அறிவித்தார். 

ரோஹித்தை உட்காரவைத்துவிட்டு, இந்திய அணி வென்றிருந்தால் பரவாயில்லை. ஆனால் பேட்டிங்கில் படுமட்டமாக சொதப்பி தோல்வியடைந்தது. இதையடுத்து ரோஹித்தை ஆடவைக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில், இந்திய அணியின் ஆடும் லெவன் குறித்து பேசிய விவிஎஸ் லக்‌ஷ்மண், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வெல்ல வேண்டுமென்றால் அணியின் சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனுடன் களமிறங்க வேண்டும். ரோஹித் சர்மா ஆடாததை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. தவான் அனுபவம் வாய்ந்த வீரர். ராகுலும் அனுபவம் வாய்ந்த ஃபார்மில் உள்ள வீரர்.

ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக சரியான ஆடும் லெவன் காம்பினேஷனுடன் ஆடவில்லை என்றால், இங்கிலாந்தை வீழ்த்துவது கடினம் என்று லக்‌ஷ்மண் தெரிவித்தார்.