உலக கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருகிறது. இந்த உலக கோப்பையில் இதுவரை வீழ்த்தப்படாத அணியாக இந்திய அணி திகழ்கிறது. 

உலக கோப்பையில் பேட்டிங்கைவிட இந்திய அணியின் பவுலிங் தான் மிரட்டலாக உள்ளது. புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் மிரட்டினர். புவனேஷ்வர் குமார் காயத்தால் விலகியதை அடுத்து இந்திய அணியில் இடம்பிடித்த ஷமி, அவரை விட ஒரு படி மேலே போய் மிரட்டுகிறார். 

இந்திய அணியின் சிக்கலாக இருந்துவந்த மிடில் ஆர்டர் தொடர்ந்து சிக்கலாகவே இருக்கிறது. ஆனால் தோனி மட்டுமே நிலையான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரொம்ப நிதானமாக ஆடி 52 பந்துகளில் 28 ரன்கள் அடித்து, பந்துக்கும் ரன்னுக்கும் இடையேயான வித்தியாசத்தை ஈடுகட்ட, டெத் ஓவர்கள் வரை களத்தில் இல்லாமல் பந்துகளை முழுங்கிவிட்டு ஆட்டமிழந்தார் தோனி. இதையடுத்து தோனியின் மந்தமான பேட்டிங் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. 

தோனி - கேதர் ஜாதவின் மந்தமான பேட்டிங்கால் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரே அதிருப்தியடைந்தார். மிடில் ஓவர்களில் அவர்கள் இருவரும் மந்தமாக ஆடியதால் தான் அதிருப்தியடைந்ததாக வெளிப்படையாகவே சச்சின் தெரிவித்தார். 

அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியிலும் கூட தோனியின் மேல் தான் பொறுப்பு இறங்கியது. இந்த போட்டியிலும் சற்று மந்தமாகவே ஆடிய தோனி, அவுட்டாகாமல் கடைசிவரை களத்தில் நின்றார். அதனால் கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி ஸ்கோரை உயர்த்தி கொடுத்தார். ஆனாலும் மிடில் ஓவர்களில் அவரது பேட்டிங் மந்தமாகவே உள்ளது. மிடில் ஓவர்களில் சிங்கிள் ரொடேட் செய்து ஆடாமல் நிறைய டாட் பந்துகளை விடுகிறார் தோனி. 

டெத் ஓவர்களில் தோனி அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்தினாலும் மிடில் ஓவர்களில் அதிக டாட் பந்துகள் விடாமல் சிங்கிள் ரொடேட் செய்து ஆடவேண்டியது அவசியம். 

சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து வீரேந்திர சேவாக்கும் தோனியின் மந்தமான பேட்டிங்கை விமர்சித்திருந்தார். ஸ்பின் பவுலிங்கை ரொம்ப அதிகமாக தடுத்து ஆடாமல், அடித்து ஆட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். தோனியின் மந்தமான பேட்டிங் குறித்த விமர்சனங்களுக்கு எல்லாம், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டிக்கு பின்னர் கேப்டன் கோலி விளக்கமளித்திருந்தார். 

தோனி ஒரு லெஜண்ட். எனவே எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிட்ட ஆடுகளத்திற்கு எந்த ஸ்கோர் போதுமானது என்பதும் தோனிக்கு தெரியும். எனவே அணிக்கு தேவையான ஸ்கோரை அவர் சேர்த்துவிடுவார் என்று ஒட்டுமொத்த அணியும் அவர் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார்.

கேப்டன் கோலியும் அணி வீரர்களும் நிர்வாகமும் அவர் மீது என்னதான் நம்பிக்கை வைத்திருந்தாலும், அதற்காக மிடில் ஓவர்களில் ரொம்ப அதிகமாக டாட் பந்துகளை விடாமல் சிங்கிள் ரொடேட் செய்து ஆடவேண்டியது அவசியம். அதைத்தான் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான லட்சுமணனும் தெரிவித்துள்ளார். 

தோனி குறித்து பேசிய லட்சுமணன், தோனி சிங்கிள் ரொடேட் செய்து ஆடும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவர் மிகச்சிறந்த வீரர் தான். எனினும் மிடில் ஓவர்களில் சிங்கிள் ரொடேட் செய்து ஆட வேண்டும் என்று லட்சுமணன் அறிவுறுத்தியுள்ளார்.