உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் பெங்கால் மற்றும் ஜார்க்கண்ட் அணிகளுக்கு இடையேயான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்கால் அணியில் தொடக்க வீரர் விவேக் சிங்கை தவிர வேறு யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை.

ஒருமுனையில் கோஸ்வாமி, மஜும்தர், மனோஜ் திவாரி என விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய விவேக் சிங், அடித்தும் ஆடினார். தொடக்கம் முதல் கடைசி வரையுமே பெங்கால் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தது. ஆனால் விக்கெட் வீழ்ச்சி எந்தவகையிலும் விவேக் சிங்கின் பேட்டிங்கை பாதிக்கவில்லை. 

அபாரமாக ஆடிய விவேக் சிங் 64 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் சதமடித்து, 100 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். அவரது பொறுப்பான சதத்தால் 20 ஓவரில் 161 ரன்கள் அடித்து பெங்கால் அணி.

162 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஜார்க்கண்ட் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான இஷான் கிஷன் 22 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரர் ஆனந்த் சிங் 13 ரன்கள் மட்டுமே அடித்தார். 3ம் வரிசையில் இறங்கிய விராட் சிங் அதிகபட்சமாக 47 ரன்கள் அடித்தார். மிடில் ஆர்டர் வீரர் உட்கர்ஷ் சிங் 14 பந்தில் 28 ரன்கள் அடித்தார். தொடக்கம் முதலே ஜார்க்கண்ட் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததுடன், அந்த அணியில் எந்த வீரருமே நிலைத்து ஆடாததால் 20 ஓவரில் 145 ரன்கள் மட்டுமே அடித்த ஜார்க்கண்ட் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.