Asianet News TamilAsianet News Tamil

சரியான நேரத்தில் செம பெர்ஃபாமன்ஸ் கொடுத்த இலங்கை வீரர்! IPL அணியில் உனக்கு ஒரு இடம் கண்டிப்பா இருக்கு - சேவாக்

இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடிய இலங்கை ஸ்பின்னர் ஹசரங்காவிற்கு ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளில் ஏதாவது ஒரு அணியில் கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் என்று வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
 

virender sehwag praises sri lanka spinner wahindu hasaranga for giving good performance at right time
Author
Chennai, First Published Aug 1, 2021, 5:08 PM IST

ஐபிஎல் 14வது சீசன் கொரோனாவால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், அந்த எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் - அக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளன. 

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் பலர் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. எனவே சில அணிகள் மாற்று வீரர்களை தேடிவருகின்றன. இப்படியான சூழலில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் அபாரமாக பந்துவீசி ஐபிஎல் அணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார் இலங்கை ஸ்பின்னர் ஹசரங்கா.

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 81 ரன்களுக்கு சுருண்டது. அதற்கு முக்கிய காரணம் இலங்கை ஸ்பின்னர் ஹசரங்கா. அபாரமாக பந்துவீசி ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், புவனேஷ்வர் குமார் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முந்தைய போட்டிகளிலும் நன்றாக பந்துவீசினார்.

எனவே அவரை ஐபிஎல்லில் எடுக்க ஆர்சிபி அணி முயல்வதாக தகவல் வெளியானது. ஆர்சிபியை போல மற்ற சில அணிகளும் அவர் மீது ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளது.

இந்நிலையில், ஹசரங்கா குறித்து பேசியுள்ள வீரேந்திர சேவாக், ஹசரங்கா அருமையாக பந்துவிசினார். இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20யில் அவர் எடுத்த சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டின் விக்கெட்டுகள் மிக முக்கியமானவை. அதுதான் இந்திய அணியின் சரிவிற்கு காரணமாக இருந்தது. ஹசரங்காவை ஐபிஎல்லில் எடுக்க சில அணிகள் ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வந்துள்ளன. ஐபிஎல் நெருங்கிவரும் நிலையில், சரியான நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஹசரங்கா. 

ஹசரங்கா விஷயத்தில் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். எந்த ஐபிஎல் அணிகளுக்கு ஸ்பின்னர் தேவையோ, கண்டிப்பாக அங்கெல்லாம் ஹசரங்காவை பரிசீலிப்பார்கள். டி20 கிரிக்கெட்டில் அவர் சீனியர் பவுலர் தான். டி20 கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 2 பவுலராக இருக்கிறார். ரேங்கிங்கில் எல்லாம் எனக்கு பெரிதாக நம்பிக்கையில்லை. ஆனால் ஹசரங்கா சிரப்பான பவுலர் என்று சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios