இந்தியா ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடந்த 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் 407 ரன்கள் என்ற இலக்கை 2வது இன்னிங்ஸில் இந்திய அணி விரட்டியபோது, அந்த இலக்கை எட்டிவிட முடியும் என்ற பாசிட்டிவ் எண்ணத்தில் அடித்து ஆடி, வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை இந்திய அணிக்கு கொடுத்தவர் ரிஷப் பண்ட்.

ரிஷப் பண்ட் 118 பந்தில் அதிரடியாக ஆடி 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 97 ரன்களை குவித்து 3 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் ஆடிக்கொண்டிருந்தபோது, ஆஸி., வீரர்கள் பீதியடைந்தனர். எப்போதுமே எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஆஸ்திரேலியர்கள். அதற்காக எதையும் செய்ய துணிந்தவர்கள்; வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

அந்தவகையில் ரிஷப் பண்ட் ஆஸி., பவுலர்களின் பவுலிங்கை அடித்து நொறுக்கி கொண்டிருந்த நிலையில், பிரேக்கின்போது, ரிஷப் பண்ட்டின் பேட்டிங் கார்டை மாற்றினார் ஸ்டீவ் ஸ்மித்.  பந்தை சேதப்படுத்திய விவகாரத்திலேயே அசிங்கப்பட்டு, கேப்டன் பதவியை இழந்து, ஓராண்டு தடையும் பெற்ற ஸ்மித்துக்கு இன்னும் புத்தி வரவில்லை.

ரிஷப் பண்ட் பிரேக்கில் சென்ற நிலையில், களத்தை விட்டு வெளியேறும் முன், அவரது பேட்டிங் கார்டை மாற்றினார் ஸ்மித். பேட்டிங் கார்ட் என்பது, ஒரு பேட்ஸ்மேன் க்ரீஸில் எந்த ஸ்டம்ப்புக்கு நேராக பேட்டை வைக்க வேண்டும், எந்த பவுலருக்கு எதிராக எந்த ஸ்டம்ப்பில் எந்த பொசிசனில் நிற்க வேண்டும் என்பதற்காக க்ரீஸில் எடுக்கும் கார்ட். அந்தவகையில் ரிஷப் பண்ட்டின் கார்டை மாற்றினார் ஸ்மித். பிரேக்கிற்கு செல்வதற்கு முன், கமுக்கமாக வந்து காலை வைத்து கார்டை மாற்றிவிட்டு சென்றார்.

ஸ்டீவ் ஸ்மித்தின் செயலை முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். ஸ்மித் ரிஷப் பண்ட்டின் பேட்டிங் கார்டை மாற்றியது, டிம் பெய்ன் அஷ்வினை சீண்டியது என ஆஸி., வீரர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடிந்தன.

இந்நிலையில், ஸ்மித்தின் மட்டமான செயல் குறித்து டுவீட் செய்துள்ள வீரேந்திர சேவாக், ஸ்மித் ரிஷப் பண்ட்டின் பேட்டிங் கார்டை க்ரீஸில் நீக்கினார். ஆஸி., வீரர்கள் அனைத்துவிதமான ட்ரிக்குகளையும் பயன்படுத்தினர். ஆனால் ஒன்றுமே பலனளிக்கவில்லை. இந்திய வீரர்களின் கடும் முயற்சியை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.