Asianet News TamilAsianet News Tamil

முடிந்தது கோலியின் சோலி.. டி20 கிரிக்கெட்டில் கோலியின் டாப் 5 கேப்டன்சி சொதப்பல்கள்

டி20 உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறும் இந்திய அணியின் வாய்ப்பு தகர்ந்துவிட்ட நிலையில், டி20 கிரிக்கெட்டில் இத்துடன் கோலியின் கேப்டன்சி கெரியரும் முடிவுக்கு வந்துவிட்ட இந்த சமயத்தில் டி20 கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக அவர் எடுத்த  5 மோசமான முடிவுகளை பார்ப்போம்.
 

virat kohlis top 5 blunders as a captain in t20 cricket
Author
Chennai, First Published Nov 7, 2021, 9:31 PM IST

2014ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி, 2017ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன்சியையும் ஏற்றார். கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய அணிக்கு வென்று கொடுத்த சாதனைக்குரிய கேப்டன் கோலி.

ஆனாலும் ஐசிசி டிராபியை வெல்லவில்லை என்ற விமர்சனம் கோலி மீது இருந்துவரும் நிலையில், அதுவே அவருக்கு கடும் நெருக்கடியை அளித்தது. 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல் வரை சென்ற இந்திய அணி, ஃபைனலில் பாகிஸ்தானிடம் தோற்றது. 2019 ஒருநாள் உலக கோப்பையில் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் நியூசிலாந்திடம் தோற்றது.

என்னதான் இந்திய அணிக்காக நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்தாலும்,  உலக கோப்பையை வெல்லாதது கோலியின் கேப்டன்சி கெரியரில் கரும்புள்ளியாகவே இருந்துவருகிறது. ஐபிஎல்லிலும் கோப்பையை வென்றதில்லை என்ற விமர்சனம் அவர் மீது உள்ளது. இவையெல்லாம் சேர்ந்து ஒரு மெகா நெருக்கடியாக உருவெடுத்ததன் விளைவாக, டி20 உலக கோப்பையுடன் இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த கோலி, ஐபிஎல்லில் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்தும் இந்த சீசனுடன் விலகுவதாக கோலி அறிவித்தார்.

கோலியால் ஐசிசி டிராபியையோ அல்லது ஐபிஎல் கோப்பையையோ வெல்ல முடியாததற்கு அவரது மோசமான கேப்டன்சியும் ஒரு காரணம். ஒரு கேப்டனாக அவரது அணி தேர்வு தொடர்ச்சியாக விமர்சனங்களை சந்தித்து வந்திருக்கிறது. அணியின் சிறந்த ஆடும் லெவனுடன் அவர் இறங்குவதில்லை. அதுமட்டுமல்லாது பாரபட்சமான வீரர்கள் தேர்வு, களவியூகங்களில் சிறப்பாக செயல்படாதது என அவரது கேப்டன்சி தொடர்ந்து விமர்சனங்களுக்குள்ளாகியே வந்திருக்கிறது. 

தான் கேப்டன்சியிலிருந்து விலகுவதற்கு முன்பாக, இந்த டி20 உலக கோப்பையை வென்றுவிட்டு செல்ல விரும்பியிருப்பார் கோலி. ஆனால் இந்த டி20 உலக கோப்பையிலும் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து, சூப்பர் 12 சுற்றுடன் தொடரைவிட்டு ஏமாற்றத்துடன் விலகுகிறது இந்திய அணி. இத்துடன் டி20 கிரிக்கெட்டில்(சர்வதேச டி20 மற்றும் ஐபிஎல்) கோலியின் கேப்டன்சி கெரியர் முடிவடைகிறது. 

இந்த சமயத்தில் கோலி டி20 கிரிக்கெட்டில் அவர் கேப்டனாக இருந்தபோது அவர் செய்த 5 சொதப்பல் சம்பவங்களை பார்ப்போம்.

1. ரோஹித் புறக்கணிப்பு

இங்கிலாந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்தபோது 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. அந்த தொடரின் முதல் 2 டி20 போட்டிகளில் ரோஹித்தை ஆடும் லெவனில் சேர்க்காமல் பென்ச்சில் உட்காரவைத்தார் கோலி. உலகின் தலைசிறந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ரோஹித்தை பென்ச்சில் உட்காரவைக்கவே முடியாது. அவருடன் இணைந்து ஆடும் வீரரை வேண்டுமானால் யாரென்று தீர்மானிக்க, சில பரிசோதனைகளை செய்யலாமே தவிர, ரோஹித்தை உட்காரவைக்கக்கூடாது. கோலியின் இந்த முடிவு கடும் விமர்சனத்துக்குள்ளானது. கோலிக்கும் ரோஹித்தும் இடையே பனிப்போர் நடந்துவருவதாக ஒரு பேச்சு இருந்த நிலையில், ரோஹித்தை உட்காரவைத்தது, அந்த பேச்சுக்கு உரமூட்டும் விதமாக அமைந்தது. பின்னர் அந்த தொடரின் 3வது டி20 போட்டியில் ரோஹித் சேர்க்கப்பட்டார்.

2. அஷ்வின் புறக்கணிப்பு

இந்த டி20 உலக கோப்பையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆடிய இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக அடைந்த படுதோல்வியால் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறுகிறது. கோலி கேப்டனான பிறகு டி20 அணியிலிருந்து அஷ்வினை ஓரங்கட்டியதே தவறு. 4 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பைக்கான டி20 அணியில் மீண்டும் எடுக்கப்பட்ட அஷ்வினை, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் ஆடவைக்கவில்லை. அஷ்வினை அணியில் எடுத்து பென்ச்சில் உட்காரவைத்த கோலியின் கேப்டன்சி படுமோசமானது. அதன்பின்னர் அஷ்வின் ஆடிய 2 போட்டிகளிலும் அவரும் அருமையாக பந்துவீசி விக்கெட் வீழ்த்தினார்; இந்திய அணியும் வெற்றி பெற்றது. அஷ்வினை அணியில் சேர்க்காதது மோசமான முடிவு.

3. யுஸ்வேந்திர சாஹல் புறக்கணிப்பு

2017ம் ஆண்டிலிருந்து கோலி தலைமையிலான இந்திய அணியில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில், குறிப்பாக டி20 போட்டிகளில்  இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னராக ஆடிவந்த ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல், இந்திய அணியில் மட்டுமல்லாது ஐபிஎல்லிலும் ஆர்சிபி அணிக்காக கோலியின் கேப்டன்சியில் அவருக்கு தேவைப்படும்போதெல்லாம் விக்கெட் வீழ்த்தி கொடுத்த பவுலர். மேலும், கோலி - சாஹல் இடையேயான புரிதலும் அபாரமானது. அப்படியிருக்கையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சாஹலின் புறக்கணிப்பு மோசமானது.

4. 2021 ஐபிஎல்லில் மும்பைக்கு எதிரான போட்டியில் அலட்சியம்

ஐபிஎல்லில் பொதுவாகவே கோலியின் சரியான அணி தேர்வின்மை, அணி காம்பினேஷனை மாற்றிக்கொண்டே இருப்பது, பவுலர்களை சரியாக பயன்படுத்தாதது, நெருக்கடியான நேரங்களில் தவறான பவுலிங் தேர்வு ஆகிய பல மோசமான விஷயங்களை செய்திருந்தாலும், 2021 ஐபிஎல்லில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஒரு படுமோசமான தவறை செய்தார் கோலி. அந்த போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் இன்னிங்ஸில் 19வது ஓவரை கைல் ஜாமிசன் பந்துவீசினார். அந்த ஓவரின் 3வது பந்தை நோ பால் கொடுத்தார் அம்பயர். அது பவுலரின் தவறால் கொடுக்கப்பட்ட நோ பால் கிடையாது. டி20 போட்டிகளில் எப்போதுமே(20 ஓவரிலும்) குறைந்தது 4 ஃபீல்டர்கள் 30 யார்டு வட்டத்திற்குள் நிற்கவேண்டும். ஆனால் அந்த குறிப்பிட்ட பந்தில் 3 ஃபீல்டர்கள் மட்டுமே வட்டத்திற்குள் இருந்தனர். கேப்டன் கோலியின் அந்த தவறால் அந்த பந்துக்கு நோ பால் கொடுக்கப்பட்டது.

 5. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் தீபக் சாஹர் புறக்கணிப்பு

தீபக் சாஹர் டி20 ஸ்பெஷலிஸ்ட் பவுலர். நல்ல ஸ்விங் பவுலரான தீபக் சாஹர், பவர்ப்ளேயில் அருமையாக வீசக்கூடியவர். இந்திய அணிக்காக இந்த பணியை செவ்வனே செய்திருக்கக்கூடிய தீபக் சாஹர், ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக பவர்ப்ளேயில் மிகச்சிறப்பாக பந்துவீசி ஆரம்பத்திலேயே ஒருசில விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்கக்கூடிய பவுலர் மட்டுமல்லாது, நன்றாக பேட்டிங்கும் ஆடக்கூடியவர். நடந்து முடிந்த 14வது ஐபிஎல் சீசனிலும் அருமையாக பந்துவீசினார். ஆனால் அவரை டி20 உலக கோப்பைக்கான இந்திய மெயின் அணியில் எடுக்காமல் ஸ்டாண்ட்பை வீரராக எடுத்தது மிகப்பெரிய தவறு.
 

Follow Us:
Download App:
  • android
  • ios