மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டான நிலையில், அதுதொடர்பாக எம்சிசி விதி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய புதிய அணிகள் அபாரமாக விளையாடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முன்னிலை வகிக்கும் நிலையில், சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே ஆகிய 2 அணிகளும் இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளன.
இந்த சீசனின் முதல் 3 போட்டிகளிலும் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி, ஆர்சிபிக்கு எதிராக ஆடிய 4வது போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் ஆடியது. ஆனால் புனேவில் நேற்று நடந்த அந்த போட்டியிலும் ஆர்சிபியிடம் தோற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 151 ரன்கள் மட்டுமே அடித்தது. 152 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆர்சிபி அணி 19வது ஓவரில் இலக்கை அடித்து வெற்றி பெற்றது. ஆர்சிபி அணியின் இளம் தொடக்க வீரர் அனுஜ் ராவத் 66 ரன்கள் அடித்தார். கோலி 48 ரன்கள் அடித்திருந்த நிலையில், 19வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதே ஓவரின் 3வது பந்தில் இலக்கை எட்டி ஆர்சிபி வெற்றி பெற்றது.
48 ரன்கள் அடித்திருந்த கோலி, டிவால்ட் பிரெவிஸ் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தில் எல்பிடபியூ ஆனார். கோலிக்கு அம்பயர் எல்பிடபிள்யூ அவுட் கொடுத்தார். ஆனால் பந்து பேட்டில் பட்டது என்பதில் உறுதியாக இருந்த விராட் கோலி ரிவியூ செய்தார். 3வது அம்பயர் அதை பரிசோதித்தபோது, பந்து பேட்டிலும் கால்காப்பிலும் ஒரே சமயத்தில் பட்டது தெளிவாக தெரிந்தது. அதற்கு நாட் அவுட் தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தேர்டு அம்பயர் அவுட் கொடுத்ததால் கோலி அதிருப்தியும் கோபமும் அடைந்தார்.
கோலி ஆடிய அந்த பந்து, கண்டிப்பாக கால்காப்பிற்கு முன்பாக பேட்டில் தான் பட்டிருக்க வேண்டும். அப்படியில்லை என்றால், குறைந்தபட்சம் பேட்டிலும் கால்காப்பிலும் ஒரே சமயத்தில் பட்டிக்கும். மிகவும் க்ளோசாக இருந்ததால் அதை உறுதிபட கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் பேட்டிலும் கால்காப்பிலும் ஒரே சமயத்தில் பட்டிருந்தால், அதில் பேட்ஸ்மேனுக்கு சாதகமாகத்தான் கொடுக்க வேண்டும் என்பது எம்சிசி விதி. எனவே விராட் கோலிக்கு நாட் அவுட் தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் விராட் கோலிக்கு ஆதரவாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தாறுமாறாக பதிவிட்டுவருகின்றனர். விராட் கோலிக்கு அவுட் கொடுக்கப்பட்டது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
